சென்னை:திருவான்மியூர் கடற்கரையில், கட்டுமானப் பணிகள் அத்துமீறி நடந்ததால், அப்பகுதியினர் அதிருப்தி அடைந்தனர். இதுகுறித்த புகாரையடுத்து, பணிகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டன.சென்னையில் மெரினா கடற்கரை போல, திருவான்மியூர் கடற்கரைக்கும், பொழுதுபோக்கவும், காலை, மாலையில் நடைபயிற்சி மேற்கொள்ளவும் ஏராளமானோர் வருகின்றனர்.இந்நிலையில், அடையாறு மண்டலம் திருவான்மியூர், 179வது வார்டுக்கு உட்பட்ட குப்பம் கடற்கரை பகுதியில், அத்துமீறி கட்டுமான பணிகள் நடந்து வந்தன. கடற்கரையில் இருந்து, 50 மீட்டர் தொலைவில் பள்ளம் தோண்டி, கட்டுமான பணிகளில் சிலர் ஈடுபட்டிருந்தனர்.
கட்டுமானத்திற்கு தேவையான செங்கற்கள், ஜல்லிக்கற்கள், சிமென்ட், மரப்பலகைகள் அடுக்கப்பட்டிருந்தன. மேலும், மின்தேவைக்காக குடிசையும் அமைக்கப்பட்டிருந்தது. அஸ்திவாரம் அமைக்க 5 அடியில் பள்ளம் தோண்டி, அதற்குள், 'ரப்பீஷ்' என்ற கட்டடக் கழிவுகளை கொட்டியிருந்தனர். ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கான பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர்.அவ்வழியே நடைபயிற்சிக்கு சென்றோர், கடற்கரையில் வீடு கட்டக்கூடாது என, கட்டுமானப் பணியில் ஈடுபட்டோரிடம் கூறினர். அதற்கு அவர்கள், முறையாக பதில் அளிக்காமல், கட்டுமான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். பொதுமக்கள் அதிகம் புழங்கும் கடற்கரையில் நடந்து வரும் அத்துமீறல் குறித்து, மாநகராட்சிக்கு புகார் வந்தது. இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், நேற்று முன்தினம் காலை சம்பவ இடத்திற்கு சென்றார்.அப்பகுதி மாநகராட்சி அதிகாரிகளை வரவழைத்த அவர், கட்டுமானத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் மண்ணை கொட்ட அறிவுறுத்தினார். உடன், பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, பள்ளம் மண் கொட்டி மூடப்பட்டது. மேலும், அங்கிருந்த கட்டுமானத்திற்கு தேவையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடத்தில், அதிகாரிகளின் கண்ணில் மண்ணை துாவி கட்டுமான பணி நடந்துள்ளது, அப்பகுதியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
வார்டு மக்களுக்கு சேவையாற்ற தான், கவுன்சிலரை தேர்வு செய்கின்றோம். அவர்கள், தினமும் காலை, மாலையில் வார்டுகளில் நிலவும் குடிநீர், சாலை, மின்விளக்கு மற்றும் அடிப்படை தேவை குறித்து கண்டறிய வேண்டும். தவிர, அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு இல்லாமல் பார்த்து கொள்வதும் அவர்களது பொறுப்பு தான்.அதேபோல, ஒவ்வொரு வார்டுக்கும் உதவி பொறியாளர் இருப்பார். அவரும், வார்டுகளில் நடக்கும் பிரச்னைகளை தினமும் அறிய வேண்டும். இருவரும், அவர்களது பணியை ஒழுங்காக செய்யாததால் தான், அத்துமீறல் நடந்துள்ளது.அதுவும், பொதுமக்கள் வந்து செல்லும் இடத்தில், ஒரு வாரமாக கட்டுமான பணி நடக்கும் வரை, கவுன்சிலருக்கு எந்த தகவலும் தெரியாமல் இருந்தது எப்படி?கடற்கரையில் கட்டுமானப் பணி மேற்கொள்ளக்கூடாது என தடை இருந்தும், கட்டுமானப் பணி மேற்கொள்ள யார் அனுமதி தந்தது; அனுமதி வழங்கியது எப்படி என மாநகராட்சி விசாரித்து, அத்துமீறலில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அந்தந்த வார்டு கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், தங்கள் வார்டுகளில் தினமும் வலம் வந்து, மக்களிடம் குறைகளைக் கேட்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.அதிகாரிகள் மீது
சட்டப்படி நடவடிக்கை
''திருவான்மியூர் குப்பம், ஆறுபடை முருகன் கோவிலுக்கு எதிரே, கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமீறலாகவும், அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தும், புதிய கட்டடம் கட்ட அஸ்திவாரப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து அறிந்ததும், உடனடியாக கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டு, தோண்டப்பட்ட குழி, பொக்லைன் இயந்திரங்கள் வாயிலாக முழுதும் நிரப்பப்பட்டு சமன் செய்யப்பட்டது.அரசு கடற்கரை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த நபர் மீது, சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதன் அருகில் ஏற்கனவே ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த சுற்றுச்சுவர், ஆழ்துளைக் கிணறு, கை பம்புகள் அகற்றப்பட்டன.மேலும், அலட்சியமாக செயல்பட்ட மாநகராட்சி அதிகாரிகளை, 'சஸ்பெண்ட்' செய்ய உத்தரவிட்டுள்ளேன். இந்த விவகாரத்தில் பெரிய நிறுவனங்கள் ஈடுபடவில்லை. உள்ளூரைச் சேர்ந்த தனிநபர் தான் ஈடுபட்டுள்ளார். அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.- ஜெ.ராதாகிருஷ்ணன்.மாநகராட்சி கமிஷனர்
அரசாணை
கடற்கரையோரப் பகுதிகளில், அதிகளவில் கட்டுமானங்கள் கட்டப்பட்டு வந்தன. இதனால், ஆமைகள் குஞ்சு பொறிப்பது பாதிக்கப்பட்டது. தவிர, கடலில் கழிவுநீர் கலப்பது, புயல் காலங்களில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவது உள்ளிட்டவை நடந்ததால், 1986க்குப் பின், கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் எந்த கட்டுமான பணிகளும் நடக்கக்கூடாது என, அரசாணை பிறக்கப்பட்டு உள்ளது. அதை மீறி, வெறும் 50 மீட்டர் தொலைவில் திருவான்மியூர் குப்பம் கடற்கரை பகுதியில், இந்த அத்துமீறல் நடந்துள்ளது.