வானுார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கணக்கில் வராத ரூ.1 லட்சம் சிக்கியது
வானுார்: வானுார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 730 ரூபாய் சிக்கியது.விழுப்புரம் மாவட்டம், வானுாரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக புகார் நிலவியது. இந்நிலையில் டி.எஸ்.பி., (பொறுப்பு) வேல்முருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் சக்கரபாணி உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை 4:00 மணிக்கு, வானுார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை இரவு 9:00 மணிவரை நீடித்தது.அப்போது, அலுவலகத்தில் இருந்த பொதுமக்கள் உள்ளிட்டோர் வைத்தருந்த பணங்களை பறிமுதல் செய்தனர். அதில், உரிய ஆவணங்களை சமர்பித்த பொதுமக்களின் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.இறுதியில், கணக்கில் வராத ஒரு லட்சத்து 5,730 ரூபாயை பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக சார் பதிவாளர் சடகோபனிடம் இரவு 9;00 மணிக்கு மேலும் விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.