விருதுநகர் : கஞ்சா புழக்கம், சட்டம் ஒழுங்கு பாதிப்பு, போதை பொருள், டாஸ்மாக் என பல காரணங்களால் மக்கள் தி.மு.க., மீது கோபத்தில் உள்ளனர். இது தேர்தலில்எதிரொலிக்கும் என தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார்.விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் விஜயபிரபாகரனின் 46 வாக்குறுதிகளை பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டு கூறியதாவது:பிரதமர் வேட்பாளர் இல்லாதது பற்றிய விமர்சனத்தை மற்ற கட்சி வேட்பாளர்கள் பிரசார யுக்தியாக வைத்துள்ளனர். மேற்கு வங்கத்தில் மம்தா தனித்து தான் போட்டியிடுகிறார். அவரும் பிரதம வேட்பாளர் யார் என்று கூறவில்லை. 2014ல் ஜெயலலிதா போட்டியிடும் போதும் பிரதமர் வேட்பாளர் யார் என்று கூறவில்லை. மோடியா லேடியா என்று தான் கேட்டார். இந்த தேர்தலில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கைகாட்டக்கூடியவர் பிரதமராக வர வாய்ப்புள்ளது.மகாலட்சுமி திட்ட உத்தரவாத கார்டில் கையெழுத்து வாங்குவது தேர்தல் விதிமீறல். ஒவ்வொரு வாக்காளரிடமும் கையெழுத்து வாங்கி உள்ளனர். இந்த ஒரு காரணத்திற்காகவே காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும். இதற்காக மூன்று இடங்களில் புகார் அளித்துள்ளோம். தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்க உள்ளேன்.மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். 18 சதவீதம்ஜி.எஸ்.டி., விதிப்பதால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுஉள்ளன. விலைவாசி உயர்வால் மக்கள் தடுமாறி வருகின்றனர். தி.மு.க.,வும் மூன்று ஆண்டுகளில் பெரும்பான்மை வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. நிறைய தொகுதிகளில் தி.மு.க., காங்., எம்.பி.,க்கள் பிரசாரத்திற்கு கூட செல்ல முடியாத நிலையை பார்க்கிறேன். எதற்கு வருகிறீர்கள் என மக்கள் கேள்வி கேட்கின்றனர். கஞ்சா புழக்கம், சட்டம் ஒழுங்கு பாதிப்பு, போதை பொருள், டாஸ்மாக் என பல காரணங்களால் மக்கள் தி.மு.க., மீது கோபத்தில் உள்ளனர். இது தேர்தலில் எதிரொலிக்கும்.விருதுநகர் தொகுதிக்கு 46 வாக்குறுதிகள் அளித்துஉள்ளோம். பா.ஜ., தேர்தல்அறிக்கையை நான் இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. இருப்பினும் தமிழ் வளர்ச்சி பற்றி வாக்குறுதிகள் அளித்ததை வரவேற்கிறேன். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் அது வரவேற்க கூடியதே. ஆனால் 10 ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால் மக்கள் மத்தியில் கோபம் உள்ளது.ஒரே நாடு ஒரே தேர்தல் வாக்குறுதியை எப்படி நடைமுறைப்படுத்தப்பட உள்ளது, அது நியாயமாக இருக்குமா, ஜனநாயக ரீதியாக இருக்குமா என்பதை மக்களிடம் தெளிவுப்படுத்த வேண்டும். அதற்கு பிறகே அது பற்றி கருத்து கூற முடியும், என்றார்.