வாடிப்பட்டி: ''அ.தி.மு.க.,வை விமர்சித்த அண்ணாமலை சித்தம் கலங்கி பேசுகிறார்'' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் காட்டமாக விமர்சித்தார்.மதுரை சமயநல்லுாரில் அ.தி.மு.க., மேற்கு ஒன்றியம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் உதய குமார் துவக்கி வைத்தார்.அவர் கூறியதாவது:தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் எல்லா கட்சிகளையும் அழித்து விடுவேன், ஒழித்து விடுவேன் என்கிறார். அவர் செல்வாக்கை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் தொண்டு செய்து, மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்னை, மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு, கச்சத்தீவு மீட்பு, நதிநீர் இணைப்பு, சுகாதார மேம்பாடு திட்டம், தொழில் வளர்ச்சிக்கு என பங்களிப்பு செய்துள்ளாரா. 52 ஆண்டு கால ஆட்சியில் அ.தி.மு.க., தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை சட்டரீதியாக மீட்டுத் தந்துள்ளது.அ.தி.மு.க.,வின் வரலாறு தெரியாத ஆக்டோபஸ் அண்ணாமலை, மனநலம் பாதிக்கப்பட்டது போல் பேசியுள்ளார். சித்தம் கலங்கியவர்களுக்கு என்ன பேசுகிறோம் எனத் தெரியாது. அவர்கள் பேசுவது மற்றவர்களுக்கும் புரியாது. எந்த உழைப்பும் இல்லாமல், சொட்டு வியர்வை சிந்தாத அண்ணாமலை, முதல்வர் கனவில் சித்தம் கலங்கியுள்ளார். அவர் மனநல மருத்துவரை அணுக வேண்டும்.ஆக்டோபஸ் நஞ்சுக்கு மருந்து கிடையாது. அட்டைப்பூச்சி தனது எடையை காட்டிலும் 8 மடங்கு ரத்தத்தை உறிஞ்சும். அவற்றை போன்றுதான் அண்ணாமலையும் உள்ளார்.கடந்த லோக்சபா தேர்தலில் அரைவேக்காடாக செயல்பட்டார். இன்று பதவிக்கு ஆபத்து என்றவுடன் அதனை தக்க வைக்க, விரக்தியில் வரம்பு மீறி உளறுகிறார்.மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்தின் பெயர் இடம் பெறவில்லை. ரயில்வே திட்டங்களை மத்திய அரசு புறக்கணித்தது. மத்திய அரசு நிதி ஒதுக்காததற்கு இதுவரை ஏன் அண்ணாமலை வாய் திறக்கவில்லை. அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி நிறைகுடம். நீங்கள் காலி தகர டப்பா. அது எழுப்பும் சத்தத்தால் எந்தப் பயனும் இல்லை.அ.தி.மு.க., டெண்டர் கட்சி அல்ல. உங்கள் கட்சி தான் டெண்டர் கட்சி. உங்கள் கட்சியில் தான் மோசடி, கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை பின்னணி உள்ளவர்கள் உங்கள் அடைக்கலத்துடன் உள்ளனர் என்றார்.