கடலில் மிதக்கும் வலைகளை சேகரித்து தரும் மீனவர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு
சென்னை:சேதமடைந்து கடலில் கைவிடப்படும் வலைகளைச் சேகரித்துக் கொடுக்கும் மீனவர்களுக்கு, சந்தை விலை அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, மாசு கட்டுப்பாடு வாரியம் செயல்படுத்த உள்ளது. திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையிலான, 13 கடலோர மாவட்டங்களில், மீன்பிடி தொழில் பிரதானமாக உள்ளது. இதற்காக, பல்வேறு வகை படகுகளை, மீனவர்கள் பயன்படுத்துகின்றனர். கரையில் இருந்து குறைந்த தொலைவில் ஒரு பிரிவினரும், ஆழ்கடலில் சென்று ஒரு பிரிவினரும் மீன் பிடிக்கின்றனர்.இதற்காக, மீனவர்கள் எடுத்துச் செல்லும் வலைகள், சில சமயங்களில் கடலில் மீன் பிடிக்கும்போது அறுந்து சேதமடைகின்றன. அந்த வலைகளை கடலில் போடாமல் கரைக்கு எடுத்து வந்து அப்புறப்படுத்த வேண்டும். ஆனால், பெரும்பாலான மீனவர்கள், சேதமடைந்த வலைகளை கடலில் அப்படியே கைவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதுபோன்ற கைவிடப்பட்ட வலைகள் கரை ஒதுங்காமல், கடலிலேயே மிதக்கின்றன. கடலாமைகள் உள்ளிட்ட உயிரினங்கள் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களாக, கடலாமைகள் அதிக அளவில் இறந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தில், தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுக்க துவங்கியுள்ளது. மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடலில் சேதமடைந்த நிலையில் கைவிடப்படும் வலைகள் மற்றும் குப்பையை அப்புறப்படுத்த வேண்டியது அவசியம். இதுபோன்ற பொருட்களை, வெளியாட்கள் சென்று சேகரிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. எனவே, மீனவர்கள் வாயிலாக, இப்பொருட்களை சேகரிக்க திட்டமிட்டு இருக்கிறோம். கடலில் இதுபோன்ற கைவிடப்பட்ட வலைகள் உள்ளிட்ட பொருட்களை மீனவர்களே சேகரித்து கொடுத்தால், அதற்கு அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். கடலோர மாவட்டங்களில், இதற்கான சேகரிப்பு மையங்களை, தனியார் நிறுவனங்கள் வாயிலாக ஏற்படுத்த, நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் இத்திட்டம் அமலுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.