உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காற்று மாசுபாட்டினால் அதிகரிக்கும் ஆஸ்துமா: இன்று (மே 7) உலக ஆஸ்துமா தினம்

காற்று மாசுபாட்டினால் அதிகரிக்கும் ஆஸ்துமா: இன்று (மே 7) உலக ஆஸ்துமா தினம்

மதுரை : ஆஸ்துமா என்பது ஒவ்வாமையால் மூச்சுக்குழாயில், நுரையீரலில் ஏற்படும் பாதிப்பு. இது இளைப்பு நோய் என்றும் அழைக்கப்படும். ஆஸ்துமா என்பது நாள்பட்ட அழற்சி நோய்.ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மே 7ம் தேதி உலக ஆஸ்துமா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆஸ்துமா தினத்தின் கரு, ஆஸ்துமா குறித்த கல்வி, விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான்.நுரையீரலில் உள்ள காற்றுப்பாதைகள், சிறிய காற்றுப்பாதைகளைச் சுற்றியுள்ள தசைகளின் வீக்கம் மற்றும் சுருக்கம் காரணமாக குறுகியதாக இருக்கும். இது இருமல், மூச்சுத்திணறல் மற்றும் மார்பு இறுக்கம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இந்த அறிகுறிகள் இடைவிடாததாகவும் இரவில் அல்லது உடற்பயிற்சியின் போது மோசமாக இருக்கும்.

ஆஸ்துமா உண்டாக்கும் காரணிகள்

வைரஸ் தொற்றுகள், துாசி, சமையல் எரிவாயு புகை, தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் நச்சுப்புகை, வானிலை மாற்றங்கள், புல் மற்றும் மகரந்தம், விலங்குகளின் ரோமம், இறகுகள், வாசனை திரவியங்கள் ஆகியவை ஒவ்வாமையை துாண்டும் காரணிகள். இது நபருக்கு நபர் மாறுபடும். பெற்றோருக்கு ஆஸ்துமா பாதிப்பு இருக்கும்பட்சத்தில், குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.காற்றில் கார்பன் மோனாக்சைடு போன்ற சில நச்சுக்காற்று கலப்பதால் சுவாசம் மூலம் மனிதனுக்கு காற்று மாசு சார்ந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதில் நுரையீரல் தான் பெருமளவு பாதிக்கப்படுகிறது. நகரங்களில் புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் 40 சதவீத நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதற்கு காரணம் காற்று மாசு தான். இது ஆஸ்துமா, 'சி.ஓ.பி.டி.' நோயை உண்டாக்குகிறது.காற்று மாசினால் நுரையீரல் பாதிப்படையும் போது முதலில் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, நெஞ்சு இறுக்கம், இளைப்பு உருவாக்குகிறது. நுரையீரல் பாதிப்பின் தன்மைக்கேற்ப டாக்டரின் ஆலோசனை படி அவசர சிகிச்சை அளிக்க வேண்டும். காற்றில் உள்ள மாசு, நச்சுத்தன்மையால் நுரையீரல் மூலமாக நச்சுக்கள் ரத்தத்தில் கலந்து அனைத்து உள் உறுப்புகளுக்கும் செல்கிறது. குறிப்பாக நமது மூளை, இதயத்திற்கு செல்கிறது.ஆய்வு அறிக்கையின் படி பெருநகரங்களில் வாழும் குழந்தைகளின் நுரையீரலின் செயல்பாடு பிற பகுதிகளில் வாழும் குழந்தைகளை விட குறைவாக காணப்படுகிறது. காற்று அதிக மாசு உள்ள பகுதியில் பிறந்த குழந்தைகளின் படிப்பும் அறிவுத்திறன் குறைவாக உள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு வளரும் குழந்தைகள் பின்னாளில் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். மாசு காற்றால் கண் பார்வை அதிகமாக பாதிப்பு அடைகிறது. பருவம் அடைந்த பெண்கள் மாசு காற்றை நுகர்வதால் ஹார்மோன் சமநிலையற்று திருமணத்திற்கு பின் குழந்தை பெறுவதில் சிரமம் உண்டாகிறது. கர்ப்பப்பை பாதிக்கிறது. காற்றில் சைரீன், சைலீன் திரவியம் கலப்பதால் மாதவிடாய் பிரச்னை அதிகரித்துள்ளது.

ஆரோக்கியமான நுரையீரல்

நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் சைக்கிள் ஓட்டும் பழக்கம் பெருமளவு உள்ளதால் அங்கு காற்று மாசு தடுக்கப்படுகிறது. நம் நாட்டிலும் நடைமுறைப்படுத்த வழிவகுக்க வேண்டும். சீனாவில் 2013ல் இருந்து காற்று மாசு குறித்து பல கட்டுப்பாடுகள் விதித்ததால் 2021ம் ஆண்டு மக்களின் ஆயுட்காலம் 2.2 ஆண்டுகள் அதிகரித்துள்ளது. காற்றின் துாய்மைக்கு ஏற்ப மனிதனின் ஆயுட்காலம் அதிகரிக்கிறது. நடைபயிற்சி, மூச்சுபயிற்சி, உடற்பயிற்சியை கடைபிடித்து தொடர்ந்து நடைமுறைப்படுத்தினால் குழந்தைகளையும் வருங்கால சந்ததியினரையும் காற்று மாசில்லா உலகத்தில் சுவாசிக்க வைக்க முடியும். ஆஸ்துமாவிலிருந்து முழுமையாக குணமாகாவிட்டாலும் டாக்டர் ஆலோசனை படி தொடர் சிகிச்சை பெற்று கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும்.-டாக்டர் மா. பழனியப்பன் நுரையீரல் சிறப்பு நிபுணர் மதுரை. 94425 24147


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ