அத்திக்கடவு - அவிநாசி நீரேற்று திட்டத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ராட்சத குழாய்கள், தேசிய நெடுஞ்சாலையில், 22.7 கி.மீ.,யும், மாநில நெடுஞ்சாலையில், 396, ஒன்றிய சாலையில், 335, பேரூராட்சி சாலையில், 24.9, ஊரக சாலையில், 5.5 கி.மீ., பயணிக்கின்றன.அரசு நிலங்கள் வழியாக 181 கி.மீ.,யும், பட்டா நிலங்கள் வழியாக, 98.4 கி.மீ.,யும் பயணிக்கின்றன. தலா ஐந்து இடங்களில் ரயில்வே தண்டவாளங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே குழாய்கள் பயணிக்கின்றன. தண்டவாளம் மற்றும் சாலைக்கு அடியில் பெரிய இரும்பு குழாய் அமைத்து, அதனுள் மற்றொரு குழாயில் நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில், 52 கிராமங்கள், திருப்பூரில், 51 கிராமங்கள், கோவையில், 25 கிராமங்கள் வழியாக என மொத்தம், 128 கிராமங்கள் வழியாக ராட்சத குழாய் பயணிக்கிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆறு நீரேற்று நிலையங்களில் உள்ள மோட்டார்களை இயக்க,33,250 கே.வி.ஏ., மின்சாரம் தேவைப்படுகிறது. இதற்காக சூர்யம்பாளையம், காந்தி நகர், திங்கலுார், நம்பியூர், பதுவம்பள்ளி, ஆகிய துணை மின்நிலையங்களில் இருந்து மின் விநியோகம் வழங்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் மன்மதன் கூறியதாவது:அத்திகடவு - அவிமாசி திட்டத்தை செயல்படுத்துவதற்காக, 2019ல் செயற்பொறியாளராக பணியை துவங்கினேன். 2023 ஜூனில் சோதனை ஓட்டம் முடியும் வரை, அங்கு தான் பணியில் இருந்தேன். கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு பெற்று, கூடுதல் பொறுப்பாக, பணியை முடித்துவிட்டு சென்னைக்கு பதவி உயர்வில் வந்துவிட்டேன். அத்திக்கடவு - அவிநாசி திட்ட குழாய், பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள காளிங்கராயன் அணைகட்டில் துவங்கி, காரமடை அருகே பெல்லாதி என்ற ஏரியில் முடியும். பெல்லாதி ஏரியின் உபரிநீர் 6 கி.மீ., வரை சிறு ஒடைகள் வழியாக பயணித்து, மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் கலந்துவிடும். இந்த பவானி ஆறு, மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக தமிழகத்திற்குள் வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
128 கிராமங்களில் பயணிக்கும் குழாய்