1000 மெகாவாட் பேட்டரி ஸ்டோரேஜ் அமைக்க அனுமதி கேட்கும் வாரியம்
சென்னை:தமிழகத்தில் முதல்முறையாக ஒரு மணி நேரத்திற்கு, 1000 மெகாவாட் திறன் உடைய பசுமை மின்சாரத்தை சேமித்து பயன்படுத்தும், 'பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ்' கட்டமைப்பை ஏற்படுத்த, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின் வாரியம் அனுமதி கேட்டுள்ளது.நாடு முழுதும் காற்றாலை, சூரியசக்தியை உள்ளடக்கிய, பசுமை மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம், உடனுக்குடன் பயன்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் அந்த மின்சாரம், 'கன்டெய்னர்' போன்று காணப்படும் அதிக திறன் உடைய பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் கட்டமைப்பில் சேமிக்கப்பட்டு, தேவை ஏற்படும்போது பயன்படுத்தப்படுகிறது.தமிழகத்தில், ஒரு மணி நேரத்திற்கு, 1000 மெகா வாட் பசுமை மின்சாரத்தை சேமித்து, மீண்டும் பயன்படுத்தும் வகையில், பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் கட்டமைப்பு ஏற்படுத்த, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இந்த ஸ்டோரேஜ் கட்டமைப்பு, ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக, மாநிலம் முழுதும் துணை மின் நிலையங்களில் உள்ள காலியிடங்களில் அமைக்கப்பட உள்ளது. தற்போது, பேட்டரி ஸ்டோரேஜ் கட்டமைப்பு பணிக்கு ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, 'டெண்டர்' கோரப்பட உள்ளது. இந்த பணியை மேற்கொள்ள, ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின்வாரியம் அனுமதி கேட்டுள்ளது.