வேலுார் மத்திய சிறையில் சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., விசாரணை
வேலுார்:வேலுார் ஆண்கள் மத்திய சிறையில், ஆயுள் கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில், சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., தலைமையிலான போலீசார், கைதிகள் மற்றும் வழக்கில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தினர்.கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மாணிக்கம்கோட்டையை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார், 30; வேலுார் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். வேலுார் சிறைத்துறை டி.ஐ.ஜி., ராஜலட்சுமி வீட்டில், வீட்டு வேலைகளை செய்ய, போலீசார் அழைத்து சென்றனர். அப்போது, 4.50 லட்சம் ரூபாய் மற்றும் வெள்ளி பொருட்களை திருடியதாக, சிறைத்துறை வார்டன்கள் சிவக்குமாரை சிறையில் சரமாரியாக தாக்கினர்.இதுகுறித்து சிவக்குமாரின் தாய் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம், வேலுார் முதன்மை குற்றவியல் நீதிபதி சிறையில் விசாரணை நடத்தி, சிவக்குமாரை சந்தித்து வாக்குமூலம் பெறவும், வழக்கின் உண்மை சம்பவம், தவறு செய்தது யார் என விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.அதன்படி, வேலுார் முதன்மை குற்றவியல் நீதிபதி ராதாகிருஷ்ணன், வேலுார் மத்திய சிறையில் சிவக்குமாரின் வாக்குமூலத்தை பதிவு செய்து, அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து சிவக்குமாரை தாக்கியதில் தொடர்புடையவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிந்து, அதன் அறிக்கையை அரசிடம் வரும், 17ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து சி.பி.சி.ஐ.டி., போலீசார், வேலுார் டி.ஐ.ஜி., ராஜலட்சுமி, வேலுார் சிறை கூடுதல் எஸ்.பி., அப்துல் ரகுமான், சிறை தனி பாதுகாப்பு அதிகாரி அருள்குமரன், டி.ஐ.ஜி., ராஜலட்சுமியின் பி.எஸ்.ஓ., ராஜூ, சிறை காவலர்கள் ரஷீத், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்ச்செல்வன், விஜி, பெண் காவலர்கள் சரஸ்வதி, செல்வி, சிறை வார்டன் சுரேஷ், சேது, உள்ளிட்ட, 14 பேர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.டி.ஐ.ஜி., ராஜலட்சுமி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளிடம், தனித்தனியாக அவர்களது வீடுகளுக்கு சென்றும், மற்றவர்களை வேலுார் மத்திய சிறைக்கு வரைவழைத்தும், சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., வினோத் சாந்தாராம், தலைமையிலான போலீசார் நேற்று காலை முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுவரை நடந்த விசாரணையில், சிறைத்துறை விதிகளை மீறி, சிறைத்துறை அலுவலரின் அனுமதி பெறாமல், சிவக்குமார் உள்ளிட்ட கைதிகள் சிலர், சிறை பெட்ரோல் பங்க்கில் வேலைக்கு அமர்த்தியுள்ளது, அனுமதியின்றி டி.ஐ.ஜி., வீட்டில் சிவக்குமாரை பணியில் அமர்த்தியது, டி.ஐ.ஜி., வீட்டில் பணம் திருடு போனது தொடர்பாக, போலீஸ் ஸ்டேஷனில் முறையாக புகார் அளிக்காதது, கைதி சிவக்குமாரை தனி சிறையில், 81 நாட்களும், மூடிய தனி சிறையில், 14 நாட்களும் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்ததும் தெரிய வந்துள்ளது.