சென்னை:சத்தீஸ்கர் மாநிலம், ராய்கட் - கரூர் மாவட்டம் புகளூர் இடையிலான, 'பவர்கிரிட்' நிறுவனத்தின் மின் வழித்தடத்தில் முழு திறனான, 6,000 மெகா வாட் மின்சாரம் எடுத்து வரப்பட்டதில், தமிழகத்திற்கு 3,500 - 4,000 மெகா வாட் கிடைக்கிறது. தமிழகத்தின் கோடை மின் தேவையை பூர்த்தி செய்ய, இந்த வழித்தடம் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது.தமிழக மின் தேவை தினமும் சராசரியாக, 15,000 மெகா வாட்டாக உள்ளது. அதில், மின் வாரியத்தின் அனல், நீர், எரிவாயு மின் நிலையங்களில் இருந்து, 5,000 மெகா வாட்டிற்கு குறைவாகவே கிடைக்கிறது. இதனால் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய, மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் மின்சாரம் வாங்கப்படுகிறது.பிற மாநிலங்களில் வாங்கப்படும் மின்சாரம், பவர்கிரிட் நிறுவனத்தின், ஆந்திரா - தமிழகம்; கர்நாடகா - தமிழகம் இடையிலான அதிக திறன் உடைய வழித்தடங்கள் வாயிலாக, தமிழகத்திற்கு எடுத்து வரப்படுகிறது.பவர்கிரிட் நிறுவனம், சத்தீஸ்கர் மாநிலம், ராய்கட்டில் இருந்து - மஹாராஷ்டிரா - ஆந்திரா - தெலுங்கானா - தமிழகம் - கேரளா இடையில், 800 கி.வோ., திறனில், எச்.வி.டி.சி., எனப்படும் அதிக திறன் உடைய இரட்டை சுற்று மின் வழித்தடம் அமைத்துள்ளது. மொத்த துாரம், 1,800 கி.மீ., திட்ட செலவு, 22,000 கோடி ரூபாய்.இத்திட்டத்தின் பெயர், ராய்கட் - புகளூர் - திருச்சூர் மின் வழித்தடம்.ராய்கட் - புகளூர் வழித்தடத்தில், வேலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஈரோடு, திருப்பூர் அருகில் உள்ள சிறுகனார் வரை, 350 கி.மீ., வழித்தடமும், சிறுகனாரில், 800 கி.வோ., திறனில் துணை மின் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.ராய்கட் - புகளூர் வழித்தடம், 2020 - 21ல் செயல்பாட்டிற்கு வந்தது. அந்த வழித்தடத்தில் ஆரம்பத்தில், 3,000 மெகா வாட் மின்சாரம் கையாளப்பட்டது. சிறுகனாரில் வரும் மின்சாரம், அருகில் உள்ள மின் வாரிய துணை மின் நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது. அவற்றில் இருந்து மாநிலம் முழுதும் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, வினியோகம் செய்யப்படுகிறது.இந்தாண்டு மார்ச் முதல், வெயில் சுட்டெரித்தது. கோடை காலத்தில் லோக்சபா தேர்தலும் நடந்ததால், மின் தேவை மிகவும் அதிகரிக்கும் என, மின் வாரியம் எதிர்பார்த்தது. அதை பூர்த்தி செய்ய, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநில நிறுவனங்களிடம் இருந்து, 3,000 - 4,000 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.எதிர்பார்த்தது போலவே சுட்டெரித்த வெயிலால், தொடர்ந்து அதிகரித்த மின் தேவை, இம்மாதம், 2ம் தேதி எப்போதும் இல்லாத வகையில், 20,830 மெகா வாட்டாக அதிகரித்தது. ராய்கர் - புகளூர் வழித்தடத்தில் முழு திறனான, 6,000 மெகா வாட் எடுத்து வரப்பட்டது. அதில் தமிழகத்திற்கு, 4,000 மெகா வாட் மின்சாரம் கிடைத்தது; மீதி, கேரளாவுக்கு சென்றது.கடந்த ஒரு வாரமாக பல மாவட்டங்களில் பெய்த மழையால் தினசரி மின் தேவை, 16,000 மெகா வாட் என்றளவில் குறைந்துள்ளது. இதனால் தற்போது, ராய்கர் - புகளூர் வழித்தடத்தில், தமிழகத்திற்கு 2,500 மெகா வாட் மின்சாரம் கிடைக்கிறது.எனவே, இந்த கோடைக் காலத்தில் தமிழக மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு, ராய்கட் - புகளூர் மின் வழித்தடம் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது.