சென்னை:கவர்னர் மாளிகையில்நடந்த சுதந்திர தினவரவேற்பு விழா மற்றும் தேநீர் விருந்தில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், அ.தி.மு.க., - பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.தமிழக கவர்னர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே, பல்கலை துணைவேந்தர் நியமனம் உட்பட பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.இரு தரப்புக்கும் இடையே கருத்தியல் ரீதியாகவும் மோதல் நிலவி வரும் நிலையில், கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் போது, கவர்னர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.இந்த ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி, நேற்று கவர்னர் மாளிகையில், சுதந்திர தின வரவேற்பு விழா நடந்தது. இதில் பங்கேற்க, முதல்வர், அமைச்சர்கள், நீதிபதிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது.தி.மு.க., கூட்டணி கட்சிகள், கவர்னர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன; தி.மு.க.,வும் புறக்கணிப்பதாக அறிவித்தது. அதேநேரம், 'அரசு சார்பில் பங்கேற்பது குறித்து, முதல்வர் முடிவு செய்வார்' என்று தெரிவிக்கப்பட்டது. நேற்று மாலை, 5:00 மணிக்கு, கவர்னர் மாளிகையில் சுதந்திர தின வரவேற்பு விழா மற்றும் தேநீர் விருந்து நடந்தது. இதில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன், உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.அ.தி.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், பெஞ்சமின்; பா.ஜ., சார்பில் தமிழக தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள்; முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகள்.பா.ம.க., சட்டசபை குழு தலைவர் ஜி.கே.மணி மற்றும் எம்.எல்.ஏ.,க்கள்; தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, மாநில துணைச் செயலர் சுதீஷ்; இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் உட்பட பலரும் பங்கேற்றனர்.அனைவரையும் கவர்னர் ரவி, அவரது மனைவி லட்சுமி ஆகியோர்வரவேற்றனர். விழாவில், சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதில் பங்கேற்றவர்களுக்கும், மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், கவர்னர் ரவி பரிசுகள் வழங்கினார். அதன்பின், தேநீர் விருந்து நடந்தது.விழா துவங்குவதற்கு முன், கவர்னரை முதல்வர்ஸ்டாலின் சந்தித்து பேசினார். முதல்வருக்கு சால்வை அணிவித்து புத்தகம் பரிசளித்தார் கவர்னர். விழாவுக்கு வந்த முதல்வரின் இரு கைகளையும் பற்றி, கவர்னர் ரவி அன்புடன் வரவேற்றார். இந்த சந்திப்பை தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே சுமுக உறவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, விழாவுக்கு வந்திருந்த அரசியல் கட்சி தலைவர்கள், ஒருவருக்கொருவர் கை கொடுத்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.