சென்னை:தலைமை செயலக ஊழியர் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், செயலர் ஹரிசங்கர் ஆகியோர், முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்:தலைமை செயலகத்தில், தட்டச்சர் நிலையிலிருந்து, சார்பு செயலர் வரை, பதவி உயர்வு பெறுவோர் பட்டியல் வெளியீடு மற்றும் பணியிட மாற்றம் போன்ற பணிகளை, மனிதவள மேலாண்மை துறை செய்து வருகிறது.கடந்த ஓராண்டாக, பல்வேறு நிலைகளில் பதவி உயர்வின் போதும், சார்பு செயலர், பிரிவு அலுவலர் நிலையில், மாவட்ட பயிற்சி முடித்து பணிக்கு திரும்புவோரை, அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய துறையில் இருந்து, வேறு துறைக்கு பணி அமர்த்தும் நடைமுறையை செயல்படுத்தி வருகிறது.தற்போது தலைமை செயலகத்தில், ஓரலகின் கீழ் பணியாற்றும், பல்வேறு துறை பிரிவு அலுவலர்கள், உதவிப்பிரிவு அலுவலர்கள் ஆகியோரை, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேல், ஒரே துறையில் பணியாற்றுகின்றனர் என்ற அடிப்படையில், வேறு துறைக்கு ஒட்டுமொத்தமாக பணியிட மாற்றம் செய்ய, மனித வள மேலாண்மைத்துறை முடிவு செய்திருப்பதாக தெரிய வருகிறது.மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியாளர்களை, ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவுக்கு மாற்றும் நடைமுறையை, முதலில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை பின்பற்றினால் எந்தவொரு பணியாளரும், அந்தத் துறை தொடர்பான அனைத்து கோப்புகளையும் கையாளும் திறனை பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.ஒரு குறிப்பிட்ட ஆண்டு கணக்கை பணிக்காலமாக வைத்து, ஒட்டு மொத்தமாக ஓரலகுத் துறையில் பணியாற்றும் பிரிவு அலுவலர்கள் மற்றும் உதவிப் பிரிவு அலுவலர்களை, துறை மாற்றம் செய்தால், துறை நடவடிக்கைகள் பாதிக்கப்படும். எனவே, மனிதவள மேலாண்மைத் துறை, ஆரம்ப நிலையிலேயே தன் முடிவை கைவிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.