சென்னை : ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடத்தலை தடுக்க வேண்டிய சிவில் சப்ளை சி.ஐ.டி., போலீசார், மாமூல் மழையில் நனைவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கைது
தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவுக்கு, ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்படுகின்றன. இதைத் தடுக்க, தமிழக காவல் துறையில், ஐ.ஜி., தலைமையில் சிவில் சப்ளை சி.ஐ.டி., பிரிவு செயல்படுகிறது. இந்தாண்டு மே மாதம் வரை, ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் மற்றும் காஸ் சிலிண்டர் கடத்தல் தொடர்பாக, 4,410 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு; 1,264 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது; 4,000க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளோம் என, சிவில் சப்ளை சி.ஐ.டி., போலீசார் கூறி வருகின்றனர். ஆனால், மாநிலம் முழுதும் ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடத்தலுக்கு, போலீசாரே உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் சிலர் கூறியதாவது: துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், சிறுவர்களை பயன்படுத்தி வருகின்றனர். துாத்துக்குடி, கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மட்டும், மாதம், 350 டன், அதாவது, 3.5 லட்சம் கிலோ ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. நடவடிக்கை
இந்தாண்டு ஏப்ரலில், கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் மாரிசெல்வம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அவரது வீட்டிற்கும் சென்று, 20க்கும் மேற்பட்டோர் தகராறு செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்குப் பின், மாநிலம் முழுதும் சிவில் சப்ளை சி.ஐ.டி., போலீசார் சோதனை நடத்தி இருக்க வேண்டும். அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.சிவில் சப்ளை சி.ஐ.டி., பிரிவின் தலைமை பொறுப்புக்கு வரும் அதிகாரிகள் அதை, 'டம்மி' பதவியாகவே கருதுகின்றனர். இதனால், அவர்களுக்குக் கீழ் செயல்படும் போலீசார், மாமூல் மழையில் நனைகின்றனர். சமீபத்தில், சென்னையில் கடத்தலில் சிக்கிய ஒருவரிடம் இருந்து, 50 லட்சம் ரூபாய் வரை கைமாறி இருப்பதாகக் கூறப்படுகிறது. சிவில் சப்ளை சி.ஐ.டி., பிரிவின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.இதனிடையே, சென்னை, திருவள்ளூர், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி மாவட்டங்களில் பணியாற்றிய வந்த, சிவில் சப்ளை சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் ஐந்து பேரை பணியிடமாற்றம் செய்து, ஐ.ஜி., ஜோஷி நிர்மல் குமார் உத்தரவிட்டுள்ளார்.