| ADDED : மே 10, 2024 10:16 PM
சென்னை:மீனவர்களின் நீண்ட கால வீட்டுவசதி தேவைகளை கருத்தில் கொண்டு, கடலோர மண்டல மேலாண்மை திட்டத்தை உருவாக்க வேண்டும் என, தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திற்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.கடலோரத்தில் வசிக்கும் மீனவர்களின் வீட்டுவசதி, மீன்பிடி வலைகளை உலர்த்துதல், மீன்களை காய வைக்கும் இடங்கள் உள்ளிட்ட அவர்களின் வாழ்வாதார வசதிகளை கருத்தில் கொண்டு, கடலோர மண்டல மேலாண்மை திட்டத்தை உருவாக்க உத்தரவிட வேண்டும் என, சென்னை பெசன்ட் நகர் ஊரூர் குப்பத்தைச் சேர்ந்த பாளையம் என்பவர் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.இதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பு:மீனவர்கள் வசிக்கும் கடலோர பகுதிகளில், அவர்களுக்கான வீடுகள், மீன்பிடி வலைகளை உலர்த்துதல், ஐஸ் கட்டி தயாரிக்கும் ஆலை, மீன்களை காய வைக்கும் இடம், மருந்தகங்கள், சாலைகள், பள்ளிகள் என அடிப்படை வசதிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், புதிய கடலோர மண்டல மேலாண்மை திட்டம் உருவாக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.அதன்படி மீனவர்களின் நீண்டகால வீட்டுவசதி தேவைகளை கருத்தில் கொண்டு, கடலோர மண்டல மேலாண்மை திட்டம், தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் உருவாக்க வேண்டும். சுகாதாரம், பாதுகாப்பு, பேரிடரை எதிர்கொள்வதற்கான தயார்நிலை ஆகியவற்றை உள்ளடக்கியதாக கடலோர மண்டல மேலாண்மை திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.