உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆளுங்கட்சி சிபாரிசில் பணியிட மாறுதல் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் புகார்

ஆளுங்கட்சி சிபாரிசில் பணியிட மாறுதல் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் புகார்

சென்னை:'தமிழகத்தில், '108' ஆம்புலன்ஸ் சேவையில், ஆளுங்கட்சி தொழிற்சங்க பரிந்துரைப்படி, பணியிட மாறுதல் செய்வதை கைவிட வேண்டும்' என, தமிழ்நாடு '108' ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.இச்சங்கத்தினர், சென்னை, மதுரை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், பல்வேறு கட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், அச்சங்கத்தை சேர்ந்த சிலர், இ.எம்.ஆர்.ஐ., - ஜி.ஹெச்.எஸ்., நிறுவன அதிகாரிகளை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து, அச்சங்கத்தின் செயலர் ரா.ராஜேந்திரன் கூறியதாவது:அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் '108' ஆம்புலன்ஸ் சேவை இயங்கி வருகிறது. இதில், 6,000த்துக்கும் மேற்பட்ட பணியாளர் பணியாற்றி வருகிறோம். சட்டவிரோதமாக, 12 மணி நேரம் வரை பணியாற்ற வற்புறுத்துகின்றனர். மேலும், ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினர் பரிந்துரைப்படியே, பணியிட மாறுதல் நடைபெறுகிறது. இதனால், சீனியாரிட்டி அடிப்படையில் சொந்த ஊரில் பணியாற்றும் வாய்ப்புக்காக, காத்திருப்போர் பாதிக்கப்படுகின்றனர். மேலும், வேலையை பாதியில் கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.அத்துடன், சென்னை போன்ற நகர பகுதிகளில் பணியாற்றும் பெண் பணியாளர்களுக்கு பாதுகாப்பான கழிப்பறை வசதி இல்லாத நிலை உள்ளது. கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில், '108' ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்த முடியும். ஆனால், நகரப்பகுதிகளில் சாலையோரங்களில் தான் நிறுத்த வேண்டியுள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில், கழிப்பறையுடன் கூடிய ஓய்வறையை பெண் பணியாளர்களுக்காக ஏற்படுத்த வேண்டும். சட்டவிரோத பணியிட மாறுதல், சம்பளம் பிடித்தம் ஆகியவற்றை கைவிட வேண்டும் என, கோரிக்கை வைத்தோம்.பணியிட மாறுதலுக்கு எவ்வித சிபாரிசும் கூடாது என, அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே, சிபாரிசு அடிப்படையில் பணியிட மாறுதல் நடைபெறாது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை