உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நில அபகரிப்புக்கு உடந்தையா? வழக்கில் எம்.எல்.ஏ., சேர்ப்பு

நில அபகரிப்புக்கு உடந்தையா? வழக்கில் எம்.எல்.ஏ., சேர்ப்பு

சென்னை: நில அபகரிப்புக்கு உடந்தையாக இருந்ததாக தாக்கல் செய்த மனு குறித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ., பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருப்பத்துாரை சேர்ந்த விஜயலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த மனு:எங்களுக்கு திருப்பத்துாரில் சொத்துக்கள் உள்ளன. அதன் அருகில் பொள்ளாச்சியை சேர்ந்த பிரேமா என்பவருக்கு சொத்து உள்ளது. நாங்கள், 1994ல் வாங்கிய நிலத்தின் சர்வே எண்ணை, தன் நிலத்துடன் இணைக்கும்படி கோரி, பிரேமா வழக்கு தொடர்ந்தார். உரிய நடவடிக்கை எடுக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. என் மகன், கோட்டாட்சியரான ஆர்.டி.ஓ., முன் ஆஜராகி, ஆவணங்களை அளித்தார். ஆர்.டி.ஓ., விசாரணையில் திருப்பத்துார் எம்.எல்.ஏ., நல்லதம்பி தலையிட்டார். எம்.எல்.ஏ.,வின் தலையீடு குறித்து கலெக்டருக்கு மனு அளித்தேன். கடைசியில், என் சொத்தின் சர்வே எண்ணை, பிரேமாவின் பட்டாவில் சேர்த்து விட்டனர்.ஆர்.டி.ஓ.,வின் நடவடிக்கை சட்டவிரோதமானது. மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மேல்முறையீடு செய்துள்ளேன். எனவே, ஆர்.டி.ஓ.,வின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். நீதிமன்றத்தின் மேற்பார்வையில், என் மேல்முறையீட்டை மாவட்ட வருவாய் அதிகாரி முடிவு செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி எஸ்.சவுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. திருப்பத்துார் எம்.எல்.ஏ., நல்லதம்பிக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டு உள்ளதால், அவரையும், இந்த வழக்கில் பிரதிவாதியாக சேர்க்கும்படி, நீதிபதி அறிவுறுத்தி இருந்தார்.இதையடுத்து, நல்லதம்பியை பிரதிவாதியாக சேர்த்திருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மனுவுக்கு பதில் அளிக்க, தி.மு.க., - எம்.எல்.ஏ., நல்லதம்பிக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 17க்கு தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை