சென்னை:கோவையில் சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கும் முன், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிய தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு, 2022ல் விதிக்கப்பட்ட 8 கோடி ரூபாய் அபராதத்தை, இரண்டு வாரங்களுக்குள் செலுத்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.கோவை மாவட்டம் கீரநத்தம் கிராமத்தில், 340 வீடுகள் உடைய அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை, கே.ஜி.ஐ.எஸ்.எல்., என்ற கட்டுமான நிறுவனம், 2013 காலக்கட்டத்தில் உருவாக்கியது. இதற்காக, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம், சுற்றுச்சூழல் அனுமதி கோரி கட்டுமான நிறுவனம் விண்ணப்பித்தது. விதிமீறல்
ஆனால், சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கும் முன், குடியிருப்பு வளாகத்தை கட்டி முடித்தது. இதில், பல்வேறு விதிகள் மீறப்பட்டுள்ளதால், கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சங்கரசுப்பிரமணியன் என்பவர், 2017ல் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதை விசாரித்த தீர்ப்பாயம், 'சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கும் முன், 340 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடும் குறைந்தது, 35 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டு உள்ளது. எனவே, விதிகளை மீறிய கட்டுமான நிறுவனம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, இடைக்கால சுற்றுச்சூழல் இழப்பீடாக 8 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்' என்று உத்தரவிட்டது.இதை எதிர்த்து, கட்டுமான நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக, மனுதாரர் சங்கரசுப்பிரமணியன் மீண்டும் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். கடைசி வாய்ப்பு
அதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் அருண்குமார் வர்மா ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தீர்ப்பாயம் உத்தரவிட்டும், 8 கோடி ரூபாய் அபராதத்தை கட்டுமான நிறுவனம் செலுத்தவில்லை. எனவே, தீர்ப்பாயம் கடைசி வாய்ப்பை வழங்குகிறது. இரண்டு வாரங்களுக்குள், அதாவது வழக்கின் அடுத்த விசாரணை தேதியான வரும் 27க்குள், 8 கோடி ரூபாயை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் டிபாசிட் செய்ய வேண்டும்; தவறினால், 12 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டிஇருக்கும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.