UPDATED : ஜூலை 17, 2024 04:51 AM | ADDED : ஜூலை 17, 2024 04:50 AM
மூணாறு : கேரளா இடுக்கி மாவட்டத்தில் பலத்த மழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் சாய்ந்தன.இம்மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து மூன்று நாட்களாக கொட்டியது. நேற்று காலை 8:00 மணிப்படி சராசரியாக 130 மி.மீ., மழை பதிவானது. தொடுபுழா, புளியன்மலை மாநில நெடுஞ்சாலையில் கட்டப்பனை நாரககானம் அருகே பாறைகள் உருண்டு ரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து தடைபட்டது. லோயர் பெரியாறு நீர் மின்நிலையத்தில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.
அடிமாலியில் புனித மார்ட்டின் சர்ச்சின் சுற்று சுவர் இடிந்தபோது மரமும் வேருடன் சாய்ந்து ஜீப் மீது விழுந்தது. கல்லார் குருசுபாறை பகுதியில் மூன்று கடைகள் சேதமடைந்தன.
கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே கேப் ரோட்டில் மண்சரிவு ஏற்பட்டது. மாவட்டத்தில் இரவு பயணத்திற்கு (இரவு 7:00 முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை) தடை விதிக்கப்பட்டது. கேப் ரோட்டில் நேற்று காலை ஏற்பட்ட மண்சரிவில் சென்னையில் இருந்து மூணாறுக்கு வந்த தமிழக அரசு பஸ் சிக்கிக் கொண்டது. இதன் வழியாக போக்குவரத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.மூணாறில் இருந்து பள்ளிவாசல், குஞ்சு தண்ணி, ராஜாகாடு, ராஜகுமாரி வழியாக மாற்று வழியில் பூப்பாறை சென்று தேனி உள்பட பிற பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.மாவட்டத்தில் கல்லார் குட்டி, பாம்ளா அணைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்ட நிலையில் மலங்கரை அணை நேற்று திறக்கப்பட்டது.1924ல் பருவ மழை தீவிரமடைந்து கொட்டியதில் ஜூலை 15ல் மூணாறு நகர் அழிந்தது. அதே நாளான நேற்று முன்தினம் மழை கொட்டித் தீர்த்ததால் மக்கள் அச்சமடைந்தனர். நேற்று காலை 8:00 மணிப்படி மூணாறில் 24 செ.மீ., மழை பதிவானது. மண் சரிவால் போக்குவரத்து தடை பட்டது. தொழிலாளர்கள் குடியிருப்புகள் ஆபத்தாக உள்ளன.