உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் கம்பத்தில் ஒப்பந்ததாரர் பெயர்

மின் கம்பத்தில் ஒப்பந்ததாரர் பெயர்

சென்னை : மின் கம்பத்தின் தரம் குறைந்திருப்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டால், ஒப்பந்ததாரரின் உரிமம் ரத்து உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.சென்னை தவிர்த்த மற்ற இடங்களில், மின் கம்பம் மேல் செல்லும் கம்பி வாயிலாக, மின் வினியோகம் செய்யப்படுகிறது. மின் வாரியத்திற்கு மாதம், 45,000 மின் கம்பங்கள் தயாரிக்கும் திறனில், 22 உற்பத்திக் கூடங்கள் உள்ளன. அங்கு கம்பம் தயாரித்து வழங்கும் பணி ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான தொழில்நுட்ப விபரத்தை மின் வாரியம் வழங்குகிறது.அதற்கு ஏற்ப, சிமென்ட், இரும்பு கம்பி பயன்படுத்தி கம்பம் தயாரித்து, 28 - 30 நாட்கள் தண்ணீரில் மிதக்க விட வேண்டும். அப்போது தான் தண்ணீரின் ஈரப்பதத்தை உறிஞ்சி, கம்பம் பலம் வாய்ந்ததாக இருக்கும்.மாநிலம் முழுதும் உள்ள கிடங்குகளுக்கு, அதிக நீளம் உள்ள லாரியில் எடுத்து செல்ல வேண்டும். செயற்பொறியாளர், உற்பத்தி கூடத்திற்கு சென்று, 500க்கு ஒரு கம்பத்தை ஆய்வு செய்ய வேண்டும். இந்த விதிகளை முறையாக பின்பற்றுவதில்லை.தண்ணீரில் ஒரு வாரம் கூட மிதக்க விடாமல், சிறிய லாரியில் எடுத்து செல்வதால், பாதி லாரிக்கு உள்ளேயும், மீதி வெளியேயும் இருப்பதால், கம்பத்திற்குள் விரிசல் ஏற்படுகிறது. தரமற்ற கம்பம் மேல், மின் கம்பி பழுதை சரிசெய்ய மின் ஊழியர்கள் ஏறும் போது விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். சாதாரண மழைக்கே, மின் கம்பங்கள் சாய்ந்து விடுகின்றன. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கம்பத்தில் தயாரிக்கப்பட்ட மாதம், ஆண்டு மட்டும் குறிக்கப்படுகிறது. இனி, எந்த கூடத்தில் எந்த ஒப்பந்ததாரரால் தயாரிக்கப்பட்டது, எந்த தேதியில் தயாரிக்கப்பட்டது உள்ளிட்ட விபரங்களும் இடம் பெறும் வகையில் அச்சிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.ஒரு கம்பம் விழுந்தால், அதன் தரம் ஆய்வு செய்யப்படும். தரத்தில் குறைபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டால், ஒப்பந்ததாரரின் உரிமம் ரத்து செய்யப்படும். இனி, டெண்டரில் பங்கேற்க தடை விதிக்கப்படும். தரத்தை ஆய்வு செய்த பொறியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை