| ADDED : ஏப் 17, 2024 10:03 PM
சென்னை:கோவை - மதுக்கரை சரகத்தில் ரயிலில் சிக்கி யானைகள் இறப்பதை தடுக்க, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் சிறப்பு கட்டுப்பாட்டு அறைக்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு கூறியுள்ளதாவது: ரயில் வழித்தடத்தில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க, கோவை - மதுக்கரை வனச்சரகத்தில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சிறப்பு கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. யானைகள் அதிகமாக நடமாடும் இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன் தெர்மல் கேமராக்களும் பயன்படுத்தப்பட்டு, யானைகளின் விபரங்கள் திரட்டப்படுகின்றன. அந்த தகவல்களை, ரயில் ஓட்டுனர்களுக்கு தெரிவிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடு திருப்திகரமாக அமைந்து உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் கூறியதாவது: கோவை - மதுக்கரையில் இரண்டு வழித்தடங்களில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இங்கு, தினசரி எவ்வளவு யானைகள் ரயில் பாதையை ஒட்டி வந்தன; எத்தனை மோதல் நிகழ்வுகள் தடுக்கப்பட்டன என்பது குறித்த புள்ளிவிபரங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிட வேண்டும். மேலும், இந்த வழித்தடத்தில் ரயில் பாதையை ஒட்டி வேலி அமைக்கும் நடவடிக்கைகள் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.