மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் உள்ள பாரம்பரிய சின்னமான அர்ஜுனன் தபசு சிற்பத்திற்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், '3டி லேசர்' ஒளி - ஒலி காட்சியமைப்பை, 5 கோடி ரூபாய் மதிப்பில், பொது மற்றும் தனியார் பங்களிப்பு திட்டமாக செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்தது.அதற்காக, சிற்பத்தின் முன்புறம் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோவில் வளாக திறந்தவெளி இடம் மாத வாடகை அடிப்படையில், ஒப்பந்தத்தில் கடந்த ஆண்டு பெறப்பட்டது. அர்ஜுனன் தபசு சிற்பம், அதனுடன் இணைந்த பஞ்சபாண்டவர் குடைவரையை ஒருங்கிணைத்து, வெளிமாநில தனியார் நிறுவனம், கடந்த ஆண்டு லேசர் ஸ்கேனரில் படம் பிடித்து, 'அனிமேஷன்' படமாக உருவாக்கியது.லேசர் காட்சி நடத்த உள்ள இடம், தொல்லியல் சிற்பத்திற்கு நெருக்கமாக உள்ளதால், தொல்லியல் துறையிடம் அனுமதி பெற்றே, கட்டமைப்புகளை ஏற்படுத்துமாறு, சுற்றுலா நிர்வாகத்திடம் கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியது. ஆனால், சுற்றுலா நிர்வாகம் அனுமதியே பெறாமல், கடந்த ஆண்டு நவம்பரில் பூர்வாங்க பணிகளை துவக்கியது. இதுகுறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியிட்ட நிலையில், கோவில் நிர்வாகம் பணிகளை நிறுத்தியது. தொடர்ந்து, சுற்றுலா முதன்மை செயலர் காகர்லா உஷா ஆய்வு செய்து, சிற்ப பகுதிக்கு ஏற்படக்கூடிய இடையூறு, சாலை போக்குவரத்தை நிறுத்தி, இக்காட்சி நடத்துவது குறித்து கேள்வி எழுப்பினார்.இதற்கிடையே, கோவில் வளாகத்தில் உள்ள சில மரங்கள், லேசர் ஒளிக்கற்றை பரவலுக்கு குறுக்கீடாக அமையும் எனக் கருதி, அவற்றை வெட்ட முயன்றனர்.அப்பகுதி வியாபாரிகள் தடுத்து மரங்களை காப்பாற்றினர். திட்ட கட்டமைப்புகள் ஏற்படுத்துவதற்காக, தொல்லியல் துறையிடம் அனுமதி கோரினர். அத்துறையின் தென் மண்டல இயக்குனர் கே.என்.பாடக், மார்ச் மாதம் ஆய்வு செய்தார். எத்தகைய கட்டமைப்புகள் என, மாதிரியுடன் காண்பித்தால் மட்டுமே, சிற்ப பகுதிக்கு இடையூறு ஏற்படுமா, ஏற்படாதா என அறிந்து, அனுமதிக்கு பரிசீலிப்பதாக தெரிவித்தார். திட்ட கட்டமைப்புகளை முன்னதாகவே அறிந்தால், அனுமதி பெறுவது சாத்தியமல்ல என, சுற்றுலா நிர்வாகம் கருதியது. தற்போது 2 அடி உயர தரைத்தள சுவரின் மீது, 7 அடி உயர இரும்பு தகடுகளை பொருத்தும் பணியை துவக்கியது. பக்தர்கள், ஹிந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்பால், தகடுகள் அகற்றப்பட்டன. இதனிடையே, அனுமதி வந்து விட்டதுஎன சில அதிகாரிகளும், அனுமதி கிடைக்கவில்லை; ஏமாற்று வேலை நடக்கிறது என, சில அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.அனுமதி கிடைத்ததுமத்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ள பாரம்பரிய சின்னங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு, லேசர் ஒளிபரப்பு செய்ய, மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது. -- காளிமுத்து,சென்னை வட்டார தொல்லியல் கண்காணிப்பாளர்,மத்திய தொல்லியல் துறை.கட்டுமானம் இல்லை
மாமல்லபுரத்தில் பாரம்பரிய சின்னங்களை பாதிக்கும், எந்த வித கட்டுமானங்களையும், தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் செய்யவில்லை. புராதன சின்னங்களை விளக்கும் வகையில்தான், ஒளிபரப்பு செய்ய உள்ளோம். அதற்கு அனுமதி பெற்று விட்டோம். லேசர் ஒளிபரப்பில் விளக்கப்படும் கருத்துகளின் இறுதி வடிவத்தை, மத்திய தொல்லியல் துறை கேட்டுள்ளது. அதை அனுப்பி ஒப்புதல் பெற்றதும் ஒளிபரப்பை துவக்கி விடுவோம். - சமயமூர்த்தி,மேலாண் இயக்குனர், தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம்சுற்றுலா கழகம் மீது போலீசில் புகார்
யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமான மாமல்லபுரம் சிற்பத்தொகுதி உள்ள இடத்தில், புதிதாக எந்த செயல்பாட்டுக்கும் அனுமதி கிடையாது. அப்படி அவசியமாக செய்ய வேண்டும் என்றால், தொல்லியல் துறை, ஹிந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட எட்டு துறைகள் ஒப்புதல் வேண்டும். கடந்த மார்ச்சில், மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல இயக்குனர், இங்கு ஆய்வு செய்தார். அப்போது, செயல்வடிவத்தை காட்டி அனுமதி பெறும்படி, அறநிலையத்துறை செயல் அதிகாரியிடம் தெரிவித்தார். ஆனால், இதுவரை எனக்கு எழுத்துப்பூர்வமான எந்த ஒப்புதலையும், எந்த துறையும் வழங்கவில்லை. ஆனாலும், பணிகளை துவக்கி உள்ளனர். இது, பாரம்பரிய சின்னங்கள் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிரானது. அதனால், நிலத்தின் உரிமையாளரான ஹிந்து சமய அறநிலையத்துறை மீதும், அதை வாடகைக்கு பெற்றுள்ள சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மீதும், போலீசில் புகார் அளித்துள்ளேன். -- ஸ்ரீதர்,தொல்லியல் பாதுகாப்பு உதவி அலுவர், மாமல்லபுரம்.