| ADDED : ஜூன் 26, 2024 08:06 AM
ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பருத்தி ,பஞ்சு வணிகர்கள் விற்பனை தொகை முழுமைக்கும் ஜி.எஸ்.டி., வரி செலுத்திய பின்பும் தற்போது கட்டிய தொகை அனைத்திற்கும் சேர்த்து மீண்டும் அபராதத்துடன் செலுத்த வேண்டுமென அனுப்பபட்ட நோட்டீசால் விரக்தியடைந்துள்ளனர்.தமிழகத்தில் கோவை, திண்டுக்கல்லை அடுத்து பருத்தி, பஞ்சு சார்ந்த தொழில்கள் ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் பல நுாறு கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. பருத்தி சாகுபடி விவசாயிகளிடம் கொள்முதல் செய்து பருத்தியாகவும், அரவை செய்து பஞ்சு, பருத்தி விதை என பிரித்து பல்வேறு பகுதிகளில் செயல்படும் மில்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.மொத்த விற்பனை தொகைக்கு உரிய 5 சதவீதம் ஜி.எஸ்.டி., வரியை 2017 முதல் செலுத்தி கணக்குகளை சமர்ப்பித்து வந்துள்ளனர்.இந்நிலையில் ஏப். முதல் பல்வேறு வணிகர்களுக்கு வரி ஏய்ப்பு செய்ததாகவும் இதுவரை கொள்முதல் செய்ததற்கு அபராதம், வட்டியுடன் ஜி.எஸ்.டி., தொகையை செலுத்த வேண்டும் என வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருவதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.வணிகர்கள் கூறுகையில் '' விவசாயிகளிடமிருந்து பருத்தி கொள்முதல் செய்து ஆர்.சி.எம் முறையில் வரி செலுத்தி 'இன்புட்' எடுத்திருக்க வேண்டும்.அறியாமையால் விற்பனை தொகை முழுமைக்கும் வரி செலுத்தி விட்டோம். இதில் அரசுக்கு வரி இழப்பு, வரி ஏய்ப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. தற்போது கட்டிய தொகை அனைத்திற்கும் சேர்த்து மீண்டும் செலுத்த கேட்பு நோட்டீசால் பல கோடி ரூபாய் முடக்கம் ஏற்படும்.ஏற்கனவே 30 சதவீதம் மட்டுமே தொழில் நடந்துவரும் நிலையில் மீண்டும் நெருக்குதலை எதிர்கொள்ள இயலாது. அரசு தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்''என்றனர்,