சென்னை: புதுச்சேரி சிறையில், 21 ஆண்டுகளாக ஆயுள் கைதியாக இருப்பவரை உடனடியாக விடுவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.புதுச்சேரியை சேர்ந்தவர் பிரேம்குமார்; கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து, 2003ல் புதுச்சேரி இரண்டாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மேல்முறையீட்டு மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 21 ஆண்டுகளுக்கும் மேலாக காலாப்பேட்டை சிறையில் உள்ளார். 14 ஆண்டுகள் சிறையில் கழித்து விட்டதால், முன்கூட்டி விடுதலை பெற தகுதி உள்ளது என, சிறைத்துறை தலைமை கண்காணிப்பாளருக்கு விண்ணப்பித்தார்.இதை பரிசீலித்த கண்காணிப்பாளர், பிரேம்குமாருக்கு எதிராக, 11 வழக்குகள் உள்ளதாலும், எதிர் கோஷ்டியினர் அவரை பழிவாங்கக் கூடும் என்பதாலும், விண்ணப்பத்தை நிராகரித்து, கடந்த ஜனவரியில் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், பிரேம்குமாரின் மகன் வேணுசங்கர் மனுத்தாக்கல் செய்தார்.மனுதாரர் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் வி.இளங்கோவன், ''பெரும்பாலான வழக்குகளில், பிரேம்குமார் விடுதலை செய்யப்பட்டு விட்டார். இரண்டு வழக்குகளில், அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது.''ஒரு வழக்கில் மட்டுமே, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் நல்ல முறையில் நடந்துள்ளார்,'' என்றார்.மனுவை விசாரித்த, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:தண்டனையை மறுஆய்வு செய்யும் வாரியம், பல விஷயங்களை பரிசீலிக்கவில்லை. சிறையில் இருக்கும் போது, 11 குற்றங்களையும் புரிந்ததாக கூறப்பட்டுள்ளது.இப்படி ஒரு முடிவுக்கு வாரியம் அல்லது தலைமை கண்காணிப்பாளர் எப்படி வந்தனர் என்பது தெரியவில்லை. மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரித்ததன் அடிப்படையே சரியல்ல. பிரேம்குமாருக்கு நன்னடத்தை சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், நன்னடத்தை அதிகாரியின் பரிந்துரை நிராகரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஆதாரமாக, போலீஸ் அறிக்கை தவிர்த்து, வேறு எந்த ஆதாரமும் இல்லை.எனவே, முன்கூட்டி விடுதலை பெற, பிரேம்குமாருக்கு தகுதி உள்ளது. தலைமை சிறை கண்காணிப்பாளரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. உடனடியாக, பிரேம்குமாரை விடுவிக்க, புதுச்சேரி அரசுக்கு உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.இதேபோல, புதுச்சேரி காலாப்பேட்டை சிறையில், 21 ஆண்டுகளாக உள்ள ரவி என்பவரை விடுதலை செய்யக்கோரிய மனுவும், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.'ஆறு நாட்கள் பரோல் வழங்கப்பட்ட அவர், 326 நாட்கள் தலைமறைவுக்கு பின் கைது செய்யப்பட்டார். முன்கூட்டி விடுதலை பெற, ரவிக்கு தகுதியில்லை' என அரசு தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஆயுள் கைதி ரவியை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டனர்.