உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை தனித்தனியாக நடத்த நீதிமன்றம் மறுப்பு

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை தனித்தனியாக நடத்த நீதிமன்றம் மறுப்பு

புதுடில்லி:தமிழகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி, 48.இவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மூன்று முதன்மை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தது.இவரது ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி அமர்வு விசாரித்து வருகிறது. மனு மீதான முந்தைய விசாரணையின்போது, 'மூன்று முதன்மை குற்றங்களையும் ஒன்றாக விசாரிக்க உள்ளீர்களா?' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தனித்தனியாக விசாரிக்க உள்ளதாக அமலாக்கத்துறை பதில் அளித்தது. 'முழுமையாக விசாரணை நடத்தி முடிக்கும் வரை மனுதாரர் சிறையில் இருக்கப்போகிறாரா?' என, கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அமலாக்கத் துறையின் தாமதத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'மூன்று முதன்மை குற்றங்களையும் ஒன்றாக விசாரிக்க போகிறீர்களா அல்லது சில குற்றங்களில் விலக்கு அளிக்க உள்ளீர்களா என்பதை தெளிவுபடுத்தும்படி நீதிபதி அபய் ஓகா கேள்வி எழுப்பினார்.அதற்கு பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''முதன்மை குற்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் 47 குற்றவாளிகளும், 112 சாட்சிகளும் இடம் பெற்றுள்ளனர். கூடுதல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது,'' என்றார். இதை தொடர்ந்து, 'மூன்று முதன்மை குற்றங்களையும் தனித்தனியாக விசாரிப்பது சரியாக வராது. தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்தும்' என, உத்தரவிட்ட நீதிபதிகள், ஜாமின் மனு மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

karutthu
ஆக 22, 2024 09:37

செந்தில் பாலாஜியை பழி ஆடாக மாற்றிவிட்டார்கள் கர்மா யாரையும் சும்மா விடாது உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ