உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசை விமர்சனம் செய்வதை அச்சுறுத்தலாக கருத முடியாது

அரசை விமர்சனம் செய்வதை அச்சுறுத்தலாக கருத முடியாது

சென்னை:குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், 'யு டியூபர்' சவுக்கு சங்கரை கைது செய்ய, சென்னை மாநகர போலீஸ் ஆணையர் பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. 'ஆளும் அரசை, கொள்கைகளை, செயல்களை விமர்சனம் செய்வதை, பொது ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக கருத முடியாது' என்றும் தெரிவித்துள்ளது.பெண் போலீசாரை அவதுாறாக பேசியதாக, சவுக்கு சங்கருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டார். சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில், புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு விடப்பட்ட டெண்டர் குறித்து, பொய்யான ஆவணங்களை சமூக வலைதளங்களில் பரப்பியதாக, சி.எம்.டி.ஏ., கண்காணிப்பு பொறியாளரும் புகார் அளித்தார்.

மனு தாக்கல்

இதையடுத்து, சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, மே 12ல் சென்னை போலீஸ் ஆணையர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து, சங்கரின் தாய் கமலா, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சிவஞானம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.இரு தரப்பு வாதங்களுக்குப் பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:சென்னை, கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில், இந்தாண்டு பிப்ரவரி 10ல் நடந்த ஆர்ப்பாட்டம் குறித்து, சவுக்கு மீடியாவில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு, மூன்று மாதங்களுக்குப் பின், சி.எம்.டி.ஏ., அதிகாரி புகார் அளித்துஉள்ளார். தாமதத்துக்கான காரணம் விளக்கப்படாதது சந்தேகத்தை எழுப்புகிறது. கைது குறித்த தகவலை தெரிவித்த புலனாய்வு அதிகாரி, யாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது என்பதையும், அவரது முகவரியையும் குறிப்பிடவில்லை. அதனால், அதுவும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.கைது மெமோவில், சங்கருக்கு காயம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காவலில் வைக்க மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவில், சங்கரின் வலது கையில் சிகிச்சைக்கான 'பேண்டேஜ்' இருந்ததாக கூறப்பட்டுள்ளது. சங்கரின் நடவடிக்கைகள், பொது ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக, ஆணையரின் உத்தரவில் கூறப்பட்டிருந்தாலும், கைதுக்கான வழக்குகளில் கூறியுள்ள குற்றங்களை பார்க்கும்போது, பொது ஒழுங்குக்கு அச்சுறுத்தல் இருப்பதை காட்டவில்லை.சங்கருக்கு எதிரான வழக்குகளில், உரிய சட்டப்பிரிவுகளின் கீழ், வழக்கமான சட்ட நடவடிக்கைகள் வாயிலாக தீர்வு காணலாம். ஆனால், குண்டர் தடுப்பு சட்டத்தை பிரயோகிக்கும்போது, பொது ஒழுங்குக்கு இடையூறு ஏற்படும் என்பதற்கான முகாந்திரங்களை நிரூபிக்க வேண்டியது, கைது உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரியின் பொறுப்பு. மாநகர போலீஸ் ஆணையரின் உத்தரவில் தகுதி இல்லை; பொது ஒழுங்கு மீறப்பட்டது என்பதை நிரூபிக்க, போதிய முகாந்திரம் இல்லை. எனவே, மாநகர போலீஸ் ஆணையரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

மாற்ற முடியாது

சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் ஒவ்வொரு பதிவின் பின்னும் அரசு சென்று, ஒருவரின் கருத்துகளை மாற்ற முடியாது. அரசியல் சட்டத்தில் கருத்து சுதந்திரத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அதுதான் ஜனநாயகத்துக்கு அழகு. அரசின் செயல்கள், கொள்கைகள் பற்றி சக மனிதரின் கருத்தை தெரிந்து கொள்ள, பார்வையாளர்களுக்கு உரிமை உள்ளது. அத்தகைய கருத்துகளை தணிக்கை செய்வது, நல்ல ஆட்சிக்கு ஆரோக்கியமானது அல்ல. எதிர்மறையான கருத்துகள், வெவ்வேறு வடிவங்களில், மொழிகளில் இருக்கலாம். சில கருத்துகள் நியாயமற்றதாகவும் இருக்கலாம். அத்தகைய கருத்துகளினால் தனிப்பட்ட நபர் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்த இதுவரை வழிமுறைகள் இல்லை. மற்றவர்களின் உரிமைகளில் மீறுவதை தடுக்க, விதிமுறைகள் அவசியம். ஒவ்வொரு குடிமகனும், பொறுப்பான முறையில் உரிமையை பயன்படுத்த வேண்டும். அரசியல் ரீதியாக, தர்க்க மாறுபாடாக கருத்துகளை தெரிவிப்பதை, பொது ஒழுங்கை மீறுவதாகக் கருத முடியாது.

பேச்சு சுதந்திரம்

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், 'யு டியூப்' போன்ற சமூக வலைதளங்களில், மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க முடியும்.பொது ஒழுங்குக்கு, நாட்டின் பாதுகாப்புக்கு இடையூறு இல்லாதபட்சத்தில், பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்த, தடுப்புக் காவல் சட்டங்களை பயன்படுத்த முடியாது. தடுப்புக் காவல் சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்றால், பொதுமக்கள் பெரும்பாலோருக்கு அச்சத்தை, துன்பத்தை ஏற்படுத்துவதாக, பொது ஒழுங்குக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்.தடுப்புக் காவல் சட்டத்தை பிரயோகிப்பதற்கு முன், அதிக கவனம், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்கும் விதமாக, சாதாரண முறையில் பயன்படுத்தக்கூடாது. பேச்சு சுதந்திரம், ஒருவரின் பிறப்புரிமை. பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் ஒழிய, மாநில அரசு அதை ஒடுக்க முடியாது.ஆளும் அரசை, அதன் கொள்கைகளை, செயல்களை விமர்சித்துப் பேசுவதை, பொது நிர்வாகத்தில் உள்ள ஊழல்களை வெளிப்படுத்துவதை, பொது ஒழுங்குக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாக கருத முடியாது. சமூக வலைதளங்களை ஒடுக்குவதற்கு முயற்சிப்பதற்கு பதில், பொதுமக்களின் குறைகளை புரிந்துகொள்ளும் வகையிலான சாதனமாக, அவற்றை அரசு கையாளலாம். 77வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நாளில், மக்களின் குரல்களை மீண்டும் ஒடுக்க வேண்டுமா?இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி