மேலும் செய்திகள்
நிட்ஷோ இன்று நிறைவு
11-Aug-2024
சென்னை:''இந்தியாவில் நடந்து வரும் டிஜிட்டல் புரட்சி, உலக நாடுகளை வியக்க வைத்துள்ளது,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.சென்னையில் நடந்த வருவாய் வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில், அவர் பேசியது:பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டங்களில், வருமான வரி செலுத்துவோர் குறித்தும், அதன் நடைமுறைகள் குறித்தும்தான் முதலில் விவாதிக்கிறோம். அரசுக்கு வருவாய் ஈட்டும் திட்டங்கள் குறித்து, கடைசியாக விவாதிப்போம். இந்தியாவில், 1.47 கோடி பேர் ஜி.எஸ்.டி., வரி செலுத்துகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் பொருட்களுக்கான வரி, 1 சதவீதம் கூட உயர்த்தப்படவில்லை. ஜி.எஸ்.டி., வரி செலுத்துவோர் எண்ணிக்கை, 3 சதவீதம் அதிகரித்துள்ளது. மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய முறையால், வருமான வரி செலுத்துவது எளிமையாகி உள்ளது. 'ஒரே நாடு; ஒரே வரி' தொடர்பான விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஜி.எஸ்.டி., அறிமுகம் செய்யப்பட்டபோதே, ஒரே வரி விகிதம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று, பலர் சொன்னார்கள். அப்போது, நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, 'ஹவாய் செருப்புக்கும், பென்ஸ் காருக்கும் ஒரே வரி விதித்தால் நன்றாக இருக்குமா; எல்லோருக்கும் ஏற்புடயைதாக இருக்குமா' என்று கேட்டார். எல்லா விஷயங்களையும் யோசிக்க வேண்டியுள்ளது.கேள்வி கேட்டால், அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், 'நிதியமைச்சராக இவர் என்ன செய்தார்; அவரை பதவியிலிருந்து நீக்குங்கள்' என்கின்றனர். அதை, என்னை நிதியமைச்சராக நியமித்தவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஊறுகாய் போட்டுக் கொண்டிருந்தவரை நிதியமைச்சராக்கி விட்டார்கள் என்று விமர்ச்சிக்கின்றனர். தாராளமாக சொல்லுங்கள். ஊறுகாய் போடுவதை தரக்குறைவாக நான் நினைக்கவில்லை. அதுபோன்று பேசாமல், ஜி.எஸ்.டி.,யில் மாற்றங்களை கொண்டுவர நாடு தயாராக இருக்கிறதா என்று விவாதித்தால் நன்றாக இருக்கும்.பசுமை புரட்சி, வெண்மை புரட்சிக்கு அடுத்து, இப்போது டிஜிட்டல் புரட்சியிலும் இந்தியா சாதித்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் செயல்பாடுகள் எளிமையாகி உள்ளன. மாநில மொழிகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்ய முடிகிறது. மக்கள் ஆதரவுடன் மோடி அரசு இதை செய்து காட்டியுள்ளது.டிஜிட்டல் தொழில் நுட்பத்தால்தான் ஜி.எஸ்.டி., வரி வசூல் சாத்தியமாகியுள்ளது. டிஜிட்டல் புரட்சியின் வெற்றியால், அனைவருக்கும் வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் வளர்ச்சிக்கு, டிஜிட்டல் புரட்சி முக்கிய காரணம். 140 கோடி மக்களை கொண்ட இந்தியாவில் நடந்து வரும் டிஜிட்டல் புரட்சியும், அதனால் நாம் அடைந்து வரும் வளர்ச்சியும், உலக நாடுகளை வியக்க வைத்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
11-Aug-2024