சென்னை : வறட்சி மற்றும் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணியை, வேளாண்மை, தோட்டக்கலை துறையினர் துவக்கிஉள்ளனர்.தமிழகத்தில் பல மாவட்டங்களில், கோடை பருவத்தில் நிலத்தடி நீராதாரங்களையும், ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீரையும் பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.நெல், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி உள்ளிட்ட வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. வாழை, தர்பூசணி, கிர்ணி, முலாம் பழம், காய்கறிகள், கீரைகள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், நீர் பற்றாக்குறை காரணமாக பல மாவட்டங்களில் பயிர்கள் காய்ந்து வருகின்றன. அவற்றில் உரிய மகசூல் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது.சூறைக்காற்று காரணமாக, திண்டுக்கல், கடலுார், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில், வாழை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால், விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக கணக்கெடுப்பை நடத்தும்படி, வேளாண்மை, தோட்டக்கலை, வருவாய்த் துறையினருக்கு கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து, பயிர் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு பல மாவட்டங்களில் துவங்கியுள்ளது.தேர்தல் நடத்தை விதிகளை விலக்கிக் கொண்ட பின், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு நிவாரணம் அறிவிக்கவுள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.