மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago
சென்னை:தங்கம் கடத்தல் விவகாரத்தில், பா.ஜ., பிரமுகர் பிரித்வி மற்றும், 'யு டியூபர்' சபீர் அலியுடன் தொடர்பில் இருந்த சுங்கத்துறை அதிகாரிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது.வெளிநாடுகளில் இருந்து விமானம் வாயிலாக சென்னைக்கு தங்கம் கடத்தி வரப்படுவது புதிதல்ல. ஆனால், கடந்த, 60 நாட்களில் சென்னை விமான நிலையத்தில், 267 கிலோ தங்கம் கடத்தப்பட்ட பின்னணி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கூறியதாவது:சென்னை விமான நிலையத்தில், கடைகளை நடத்துவதற்கு உரிமம் பெற்ற வித்வேதா பி.ஆர்.ஜி., நிறுவனத்தில், பா.ஜ., நிர்வாகி பிரித்வி இயக்குனர் பொறுப்பில் இருந்தார். அவரிடம், 'யு டியூப்' சேனல் நடத்தி வரும் முகமது சபீர் அலி பேசி வந்துள்ளார். இதன்பின், விமான நிலையத்தில் கடை நடத்துவதற்கு, பிரித்வி உதவி செய்துள்ளார். இதை மறுக்கும் பிரித்வி, 'கடை நடத்துவது தொடர்பாக, சபீர் அலி என்னை தொடர்பு கொண்டது உண்மை. ஆனால், அவரிடம் எங்கள் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு நிர்வாகிகளை பாருங்கள் என்று தான் சொன்னேன்' என்கிறார்.'ஒரு முறை கூட சபீர் அலியை நேரில் பார்த்தது இல்லை' என்றும் கூறுகிறார். தற்போது, பிரித்வி வெளிநாட்டில் இருப்பதால், நாடு திரும்பியதும் நேரில் ஆஜராகும்படி கூறியுள்ளோம்.சபீர் அலி, விமான நிலையத்தில் கடை நடத்த, வித்வேதா நிறுவனத்துக்கு 77 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இது ஹவாலா பணம் என, தெரியவந்துள்ளது. இந்தக் கடையே, பிரித்விக்கு சொந்தமானது என்ற தகவலும் உள்ளது. சபீர் அலி உள்பட எட்டு பேருக்கு, விமான நிலைய அடையாள அட்டை பெற்றுக் கொடுத்ததில் பிரித்வியின் பங்கு உள்ளது.இந்த அடையாள அட்டையை அவ்வளவு எளிதில் பெற முடியாது. நன்னடத்தை, குடும்ப பின்னணி, குற்ற வழக்கில் சிக்கிய நபரா என, தீவிர விசாரணைக்கு பின்னரே வழங்கப்படுவது வழக்கம். இதற்கு போலீசின் தடையில்லா சான்றும் அவசியம். அடையாள அட்டை இருந்தால், விமான நிலையத்தில் எந்த பகுதிக்கும் சென்று வரலாம்; கெடுபிடி இருக்காது.இதைப் பயன்படுத்தி, தங்கத்தை கடத்தியுள்ளனர். விசாரணையில், சென்னை பல்லாவரத்தில், சபீர் அலி உள்ளிட்ட எட்டு பேர், மலக்குடலில் தங்கம் கடத்துவது தொடர்பாக பயிற்சி பெற்றுள்ளனர்.சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணியர் மலக்குடலில் தங்கம் கடத்தி வந்து, கழிப்பறையில் வைத்துள்ளனர். அதை சபீர் அலியின் கடை ஊழியர்கள் மறைத்து, வெளியே கொண்டு சென்றுள்ளனர்.சுங்கத்துறை மற்றும் விமான நிலைய வர்த்தக பிரிவை சேர்ந்த ஒரு சில அதிகாரிகள் பணியில் இருந்த போது தான், தங்கக் கடத்தல் நடந்துள்ளது. விமான நிலையத்தில், பகல், இரவு நேரங்களில் துல்லியமாக படம் பிடிக்கும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன; உளவு அமைப்புகளின் கண்காணிப்பும் உள்ளது. இதனால், அதிகாரிகள் துணையின்றி தங்கக் கடத்தல் சாத்தியம் இல்லை. கடத்தல்காரர்களுக்கு சாதகமாக செயல்பட்ட அதிகாரிகளிடம், விசாரணை நடந்து வருகிறது. கடத்தல் தங்கத்தை பெற்றுக் கொண்ட நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.--
'கடத்தல் சம்பவத்தில், வித்வேதா பி.ஆர்.ஜி., நிறுவனம், அதில் பணியாற்றிய பா.ஜ., பிரமுகர் பிரித்வியின் பங்கு, பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து ஒளிவுமறைவின்றி அறிக்கையாக தர வேண்டும்' என, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு, மத்திய பெண் அமைச்சர் ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.***
2 hour(s) ago