உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடுத்த பிறவியிலும் காக்கி சீருடை அணிய வேண்டும் ஓய்வு நாளில் டி.ஜி.பி., ஏ.கே.விஸ்வநாதன் உருக்கம்

அடுத்த பிறவியிலும் காக்கி சீருடை அணிய வேண்டும் ஓய்வு நாளில் டி.ஜி.பி., ஏ.கே.விஸ்வநாதன் உருக்கம்

சென்னை:''அடுத்த பிறவி ஒன்று இருக்குமானால் நான் மீண்டும் காக்கிச் சீருடை அணிந்த காவல் துறை அதிகாரியாக பணிபுரிய விரும்புகிறேன்,'' என ஓய்வு பெற்ற நாளில் டி.ஜி.பி., ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.தமிழக காவல் வீட்டு வசதி கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக பணிபுரிந்து வந்த டி.ஜி.பி., ஏ.கே.விஸ்வநாதன் நேற்று ஓய்வு பெற்றார். இவருக்கான பிரிவு உபசார நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. ஏ.கே.விஸ்வநாதனுக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை செய்தனர். சட்டம் --- ஒழுங்கு டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நினைவு பரிசு வழங்கினார்.நிகழ்ச்சியில் ஏ.கே.விஸ்வநாதன் பேசியதாவது:நான், 1990ல், இந்திய காவல் பணி அதிகாரியாக சேர்ந்து, 34 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெறுகிறேன். தமிழக காவல் துறையில் பணிபுரிந்ததை பெருமையாக கருதுகிறேன். என் தாத்தா பெருமாள் தலைமை காவலராக பணிபுரிந்தார். என் தந்தை அய்யாசாமி, எஸ்.ஐ.,யாக பணியில் சேர்ந்து டி.எஸ்.பி., வரை பணிபுரிந்தார்.எங்கள் வீட்டில் நான் மூன்றாம் தலைமுறை காவல் அதிகாரி. இதற்கு காரணமாக இருந்த என் தாத்தா, பாட்டிக்கு நன்றி. எனக்கு பக்கபலமாக இருந்த என் மனைவியும், சீருடை பணியாளர் தேர்வு குழும டி.ஜி.பி.,யாக உள்ள சீமா அகர்வால் மற்றும் என் குடும்பத்தாருக்கும் நன்றி.எனக்கு தரப்பட்ட எந்த பணியையும் சிறியதாக நினைத்தது இல்லை. அதில் என்ன மாற்றம் செய்யலாம், சிறந்த முறையில் பணிபுரியலாம் என்று சிந்தித்து செயல்பட்டுள்ளேன். நம் பணியின் மீது மற்றவர்களின் அளவீடுகளை விட நமக்கு மன திருப்தி உள்ளதா என பார்க்க வேண்டும். அந்த வகையில் எனக்கு முழு மன திருப்தி உள்ளது.கம்பீரமான தமிழக காவல் துறையில் என்னோடு பணிபுரிந்த காவல் அதிகாரிகள், போலீசார் அனைவரும் துடிப்புடனும், வேகம் மற்றும் விவேகத்துடனும் செயல்பட்டனர். ஓய்வு பெறும் நாளில் காக்கிச் சீருடை அணியும்போது என் கண்கள் கலங்கின. எனக்கு அடுத்த பிறவி ஒன்று இருக்குமானால் காக்கிச் சீருடை அணிந்த காவல் அதிகாரியாகவே பணிபுரிய வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் சென்னை போலீஸ் கமிஷனர் அருண், ஆயுதப்படை கூடுதல் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட அதிகாரிகள், ஏ.கே.விஸ்வ நாதனின் குடும்பத்தார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை