உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தேவை திருமாவளவன் பேச்சால் தி.மு.க., அதிர்ச்சி

ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தேவை திருமாவளவன் பேச்சால் தி.மு.க., அதிர்ச்சி

சென்னை:'ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு தேவை' என, திருமாவளவன் பேசிய வீடியோ, அவரது எக்ஸ் வலைதளத்தில் பதிவிடப்பட்டு, உடனடியாக நீக்கப்பட்டது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின், சமீப கால பேச்சு, கூட்டணிக்குள் மோதல் உள்ளதோ என்ற சந்தேகத்தை அதிகரித்து வருகிறது. வி.சி., சார்பில், அக்., 2ல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்தப்பட உள்ளது. இம்மாநாட்டில் அ.தி.மு.க.,வும் பங்கேற்கலாம் என, திருமாவளவன் அழைப்பு விடுத்தார். இதை, அ.தி.மு.க.,வும் வரவேற்றது. தி.மு.க., கூட்டணியில் இருந்தபடி, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வுக்கு அழைப்பு விடுத்தது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில், நேற்று முன்தினம் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், திருமாவளவன் பேசிய வீடியோ, அவரது எக்ஸ் வலைதளத்தில் பகிரப்பட்டது. அவர் பேசியிருப்பதாவது:தமிழகத்தில் இதற்கு முன் யாரும் கூட்டணி ஆட்சி என குரலை உயர்த்தினார்களோ, இல்லையோ; 2016ல் கூட்டணி ஆட்சி என்ற குரலை வி.சி., உயர்த்தியது. ஆட்சியில் பங்கு வேண்டும் என்பது வேறு; தொகுதி பங்கீடு என்பது வேறு. ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்பது, 1999ல் வி.சி., முன் வைத்த முழக்கம்.நான் முதன் முதலில் நெய்வேலியில், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தபோது, 'கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்; எளிய மனிதனுக்கு அதிகாரம் வேண்டும்' என்ற கோரிக்கையை முன் வைத்தேன். இதை சொல்கிற துணிச்சல் வி.சி.,க்கு உண்டு. எங்களை புரிந்து கொள்ள இந்த வரலாறை தெரிந்து கொள்ள வேண்டும். சராசரி மனிதனை போல் எங்களை பார்க்கக்கூடாது.இவ்வாறு, அவர் பேசி இருந்தார்.இந்த வீடியோ சிறிது நேரத்திலேயே நீக்கப்பட்டாலும், பலரும் அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அமெரிக்க பயணம் முடிந்து, முதல்வர் நேற்று காலை தமிழகம் திரும்பிய நிலையில், ஆட்சியில் பங்கு என்று திருமாவளவன் பேசிய வீடியோவை பதிவிட்டு, பின் நீக்கியது, தி.மு.க.,வினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க., உடனான மோதலால்தான், திருமாவளன் இப்படி பேசியதாக தகவல் பரவியது. இதற்கு பதில் தரும் வகையில், மதுரையில், திருமாவளவன் அளித்த பேட்டி:கடந்த 1999ம் ஆண்டு மூப்பனாரோடு கை கோர்த்து, தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்தபோது, நாங்கள் வைத்த முழக்கம். 'கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்; எளிய மனிதனுக்கும் அதிகாரம்' என்பதாகும். எல்லா மேடைகளிலும், மூப்பனார் பேசுகையில், 'திருமாவளவன் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்தை வைக்கிறார். அவரை பாராட்டுகிறேன்' எனக் கூறி உள்ளார்.அதை நினைவுப்படுத்தி நேற்று முன்தினம் மறைமலை நகர் கூட்டத்தில் பேசினேன். அதை 'எக்ஸ்' பதிவில், கட்சி நிர்வாகக் குழுவை சேர்ந்தவர்கள் பதிவிட்டுள்ளனர். ஏன் அதை திரும்ப எடுத்தனர் எனத் தெரியவில்லை. இன்னும் அவர்களை தொடர்பு கொண்டு பேசவில்லை. அது புதிய கோரிக்கை அல்ல. எளிய மக்களிடம் அதிகாரம் வந்தால்தான் உண்மையான ஜனநாயகமாக இருக்கும். ஜனநாயக பரவலாக்கத்தில், அதிகார பரவலாக்கம் முக்கியம். அதை எப்போதும் பேசலாம்; எப்போதும் கேட்கலாம். இனி நான், 2026 தேர்தலில்தான் கேட்க முடியும். 'மது ஒழிப்பு மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க.,வும் பங்கேற்கலாம். இதை தேர்தலோடு இணைத்து பார்க்கக்கூடாது' என, பத்திரிகையாளர்களிடம் கூறினேன். இதை ஊதி பெரிதாக்குகின்றனர்.தற்போது தி.மு.க., கூட்டணியில் உள்ளோம். அதில் எந்த சிக்கலும் இல்லை. மது ஒழிப்பில் உடன்பாடு உள்ள யார் வேண்டுமானாலும், மாநாட்டில் பங்கேற்கலாம். யாருக்கும் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கவில்லை. தேசிய மகளிர் அணித் தலைவர்களை அழைக்க முடிவு செய்துள்ளோம். தேர்தல் கூட்டணி அடிப்படையில், இந்த மாநாட்டை நடத்தினால் எனக்கு அசிங்கம். மாநாட்டில், 100 சதவீதம் மது ஒழிப்புக்கான அரசியலை முன்னெடுக்கிறோம். தேர்தல் கூட்டணி கணக்கு கிடையாது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

SIVA
செப் 15, 2024 13:00

பத்து முதல் பதினைந்து சதவிகிதம் வாக்குகள் மற்றும் மக்கள் செல்வாக்கு இருந்த கேப்டன் அவர்களுடன் திமுக கூட்டணி வைக்க முடியாமல் போனதன் காரணம் ஆட்சியில் பங்கு என்று அவர்கள் கேட்டதால் என்று ஒரு செய்தி உள்ளது, , அவர்கள் மெஜாரிட்டி இல்லாமல் மைனாரிட்டியாக இருந்த போதே யாருக்கும் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லை ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை