உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., ஆட்சி சாதனையல்ல வேதனை: பழனிசாமி காட்டம்

தி.மு.க., ஆட்சி சாதனையல்ல வேதனை: பழனிசாமி காட்டம்

சென்னை:'தி.மு.க., அரசின் மூன்றாண்டு கால ஆட்சி, சாதனையல்ல வேதனை' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில், மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத, அளித்த வாக்குறுதிகளில் மக்களுக்கு பலனளிக்கும் எதையும் நிறைவேற்றாத, ஏமாற்று மாடல் அரசின் முதல்வர் ஸ்டாலின், தான் நடத்துவது சொல்லாட்சியல்ல; செயலாட்சி என்று கூறியிருக்கிறார்.

தலைக்குனிவு

கடந்த 36 மாதங்களில், தமிழகத்தின் பல பகுதிகளில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருட்கள் கேந்திரமாக மாறியுள்ளது.போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்துவதில், ஆளுங்கட்சியின் சில நிர்வாகிகளே ஈடுபட்டுள்ளது, தமிழகத்தை தலை குனிய வைத்துள்ளது. தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்ததும், மின் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம், குப்பை வரி, பால் விலை போன்றவற்றை உயர்த்தி, தமிழக மக்களுக்கு பரிசாக அளித்துள்ளது.அத்தியாவசிய பொருட்கள், கட்டுமான பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. தேர்தலின் போது பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமின்றி, அரசு மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.வழக்கம் போல தி.மு.க., ஆட்சியில், மின்வெட்டால் மக்கள் அவதிப்படுகின்றனர்.மூன்று ஆண்டுகளில், 3.50 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி, மக்களை கடனாளியாக்கியது தான், தி.மு.க., அரசின் சாதனை.கடந்த 36 மாதங்களாக, எந்த ஒரு புதிய திட்டமும் ஆட்சியில் செயல்படுத்தப்படவில்லை. மாறாக, எங்கள் ஆட்சியில் துவக்கப்பட்ட, செயல்படுத்தப்பட்ட பணிகளை, 'ஸ்டிக்கர்' ஒட்டி திறந்தது தான் தி.மு.க., அரசின் சாதனை.

மூடுவிழா

மேலும், அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட, பல மக்கள் நலத்திட்டங்கள் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றன. பல திட்டங்கள் மூடுவிழா செய்யப்பட்டன. இது தான், தி.மு.க., அரசின் மூன்று ஆண்டு கால சோதனைகள்.இன்னும் இரண்டு ஆண்டுகள் தி.மு.க., ஆட்சி தொடர்ந்தால், தமிழகம் படு பாதாளத்திற்கு சென்று விடுமோ என்று மக்கள் அஞ்சுகின்றனர். தற்போது தமிழகத்தில் நடப்பது சொல்லாட்சியுமல்ல; செயலாட்சியுமல்ல.மாறாக, செயலற்ற ஆட்சி; பயனற்ற ஆட்சி. மக்கள் விரோத ஆட்சி என்பதை தமிழக மக்கள் விரைவில் நிரூபிப்பர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்