| ADDED : ஜூலை 05, 2024 01:58 AM
மதுரை:திண்டுக்கல்லை சேர்ந்தவர் விக்னேஷ்குமார், 40. லோக்சபா தேர்தலின் போது, மதுரை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு, 'ஆக்டிங்' டிரைவராக இருந்தார். தேர்தலுக்கு பின், மதுரை நகரியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் பணிபுரிந்து வருகிறார். வருமானவரித்துறை அதிகாரிகளுடன் பழகியதை பயன்படுத்தி, மதுரை, திண்டுக்கல், தேனியில் உள்ள பிரபல தொழிலதிபர்களை தொடர்பு கொண்டு, 'எனக்கு பணம் கொடுத்தால் 'ரெய்டு' வராமல் பார்த்துக் கொள்கிறேன்' என, மிரட்டி வந்துள்ளார்.மதுரையிலும் பிரபல நகைக்கடை உரிமையாளர்கள், தேனி தனியார் மருத்துவமனை, பேக்கரி, ஹோட்டல் உரிமையாளர்களிடமும், 'டீலிங்' பேசியுள்ளார். சந்தேகப்பட்ட உரிமையாளர் ஒருவர், வருமானவரித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்தபோது தான் விக்னேஷ்குமார் மிரட்டுவது தெரிந்தது.தொடர்ந்து, அவரை மதுரை கீழவாசலில் உள்ள ஒரு நகைக்கடைக்கு அதிகாரிகள் வரவழைத்தனர். அங்கு வந்த விக்னேஷ்குமார் அதிகாரிகளிடம் சிக்கினார்.அவரை வருமான வரித்துறை நுண்ணறிவுப்பிரிவு உதவி இயக்குனர் புஷ்பராஜ் புகாரில், விளக்குத்துாண் போலீசார் கைது செய்தனர்.