சென்னை:'டாஸ்மாக் சரக்குகளில், 'கிக்' இல்லாததால் தான் கள்ளச்சாராயம் நோக்கிச் செல்கின்றனர்' என, அமைச்சர் துரைமுருகன் பேசியதற்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: அமைச்சர் துரைமுருகன் பேச்சு, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, 65 உயிர்களை இழந்து வாடும், பட்டியலின மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. டாஸ்மாக் சரக்கில், 'கிக்' இல்லை என, அவர் சட்டசபையில் கூறியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி: அரசு விற்கும் மதுவில், 'கிக்' இல்லை; அதனால் தான், கள்ளச்சாராயம் நோக்கி போகின்றனர் என, அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். விட்டால் அரசு விற்கும் மதுவில், 'கிக்' ஏற எதையாவது கலக்க சொல்வார் போலிருக்கிறது. குடிமக்களே உஷார்.அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வரும் சூழல் இல்லை என, அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். மதுபானத்தில், 'கிக்' இல்லை என்பதால், உழைப்பாளிகள் கள்ளச்சாராயத்தை நாடி செல்வதாக, அமைச்சர் துரைமுருகன் பேசியிருப்பது, அவர் வகிக்கும் பதவிக்கு உகந்ததல்ல.தமிழகத்தில் போதைப் பொருட்களின் பயன்பாடு, வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருக்கும் நிலையில், 24 மணி நேரமும் சட்டவிரோதமாக விற்கப்படும் மதுபானங்களாலும், கள்ளச்சாராயத்தாலும், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் சீரழிந்து வருகிறது.எனவே, இனியும் மக்களை ஏமாற்றாமல், தேர்தல் வாக்குறுதியின்படி, மதுக்கடைகளை படிப்படையாக குறைத்து, பூரண மதுவிலக்கை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.