நெல் நனைய காரணமானவர்கள் மீது நடவடிக்கை: அரசு உத்தரவு
சென்னை:மத்திய அரசு சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து, நெல் கொள்முதல் செய்யும் பணியை, நுகர்பொருள் வாணிப கழகம் மேற்கொள்கிறது. இந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. நேரடி கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படும் நெல்லை, சேமிப்பு கிடங்குகள் மற்றும் அரிசி ஆலைகளுக்கு விரைந்து அனுப்ப வேண்டும். திறந்த வெளியில் வைக்கக் கூடாது என, வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர்களுக்கு, உணவுத்துறை உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், கடந்த சில தினங்களாக, டெல்டா மாவட்டங்களில் திடீரென பெய்த மழையால், நாகையில் உள்ள கொள்முதல் நிலையங்களில், திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த, நெல் மூட்டைகள் நனைந்து பாழாகின. இதற்கு காரணமான பணியாளர்கள், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு, மண்டல உயர் அதிகாரிகளுக்கு, நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குநர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.