உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தென் மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை மையம் தகவல்

தென் மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை மையம் தகவல்

சென்னை : 'வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்மாவட்டங்களில் இன்று மிக கனமழையும், டெல்டா மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அதன் அறிக்கை:

பூமத்திய ரேகையை ஒட்டிய, வடகிழக்கு இந்திய பெருங்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அனேக இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்யலாம். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், இன்று கனமழை பெய்யலாம்.கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை எச்சரிக்கை பட்டியலில் வராத, பிற மாவட்டங்களில், இன்றும், நாளையும், பகல் நேர வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை கூடுதலாக பதிவாகும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

8 மாவட்டங்களில் வெப்ப அலை

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பி.செந்தாமரை கண்ணன் கூறியதாவது: வரும் கோடை காலத்தில், வெப்ப அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்த விபரங்களை, இந்திய வானிலை துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ராணிப்பேட்டை, திருப்பத்துார், வேலுார், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், ஏப்ரல், மே மாதங்களில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது. சில சமயங்களில், கரூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களிலும் வெப்ப அலைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த சமயத்தில் அதிகபட்ச வெப்பம், இயல்பை விட 4.5 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும். ஆனால், வெயில் அதிகரிப்பால், பரவலாக பல்வேறு மாவட்டங்களில், ஏப்., மே மாதங்களில் வெப்ப அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கும் வழிகாட்டுதல்களை கடைப்பிடித்தால், பாதிப்புகளை சமாளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மார்ச் 20 வரை குளிர் நீடிக்கும்

தமிழகத்தில், சென்னை உட்பட பல மாவட்டங்களில், பகலில் வெப்பம் அதிகம் இருக்கும் நிலையில், இரவு குளிராக உள்ளது. இதுகுறித்து தனியார் வானிலை ஆர்வலர் ஹேமசந்தர் கூறியதாவது: தமிழகத்தில் நடப்பு ஆண்டில், குளிர்காலம் முடிந்து, கோடை காலம் இன்னும் முறையாக துவங்கவில்லை. அதனால், இரவு, காலை நேரங்களில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பனிமூட்டம் காணப்படுகிறது. பகலில் வெப்பம் அதிகரிக்கும் அளவுக்கு, இரவில் வெப்பத்தின் தாக்கம் தெரியாமல் இருக்க, இதுவே காரணம். மார்ச் 20 வரை, இந்நிலை தொடர வாய்ப்புள்ளது. மார்ச் 20க்கு பின் கோடை காலம் முழுமையாக துவங்கும் போது, குளிரின் தாக்கம் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ