உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில் திருவிழா மண்டகப்படி உரிமை உயர் நீதிமன்றம் உத்தரவு

கோவில் திருவிழா மண்டகப்படி உரிமை உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை:புதுக்கோட்டை மாவட்டம் மேலமங்கலம் வடக்கு கிராம கோயில் திருவிழாவின் 11 வது நாளில் குறிப்பிட்ட பிரிவு மக்களை மண்டகப்படி நடத்த அனுமதிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மேலமங்கலம் வடக்கில் காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. திருவிழாவில் தங்கள் சமூகத்தினருக்கு மண்டகப்படி நடத்த அனுமதிக்க அறந்தாங்கி ஆர்.டி.ஓ.,விற்கு உத்தரவிட வேண்டும் என மெய்யப்பன் என்பவர் மனு செய்தார்.ஜூலை 5ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: ஐந்து சமூகங்களில் முதல் நான்கு சமூகங்கள் மண்டகப்படி உரிமையை அனுபவித்து வருகின்றன. மற்றொரு சமூகமும் அதே உரிமையைப் பெற உரிமையுண்டு. சமூக பிரச்னையை உணர்வுப்பூர்வமாக கையாள வேண்டும். உள்ளூர் தலைவர்களை சந்தித்து சமாதானப்படுத்த வேண்டும். ராமகிருஷ்ண தபோவனத்தின் சுவாமி நியமானானந்தா, கோவிலுார் மடத்தின் நாராயண ஞான தேசிகர், வி.எச்.பி.,யின் சேதுராமன் மற்றும் ராமநாதபுரம் குப்புராமுவை மனதில் வைத்திருக்கிறேன். இதயம், மனசாட்சியை கவர்ந்து மாற்றம் கொண்டுவந்தால் அது நிலைத்ததாக இருக்கும். இவ்விவகாரம் ஹிந்து கோயிலைச் சுற்றி வருவதால், ஹிந்து ஒற்றுமைக்காக பாடுபடும் அமைப்புகளால் மட்டுமே ஒற்றுமையை கொண்டுவர முடியும். மற்றவர்கள் கலங்கிய நீரில் மீன்பிடிப்பார்கள். சம்பந்தப்பட்ட தாசில்தார் சமாதான கூட்டம் நடத்த வேண்டும். திருவிழாவில் ஏதேனும் ஒரு நாளில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை மண்டகப்படி நடத்த அனுமதிப்பது முடிவாக இருக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.இதை எதிர்த்து மேலமங்கலம் வடக்கு காசிநாதன் உட்பட சிலர் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: திருவிழா ஆக., 4 ல் துவங்குகிறது. ஆக.,14 ல் 11 வது நாள் திருவிழாவில் குறிப்பிட்ட (ஏ) பிரிவு மக்களை மண்டகப்படி நடத்த அனுமதிக்க வேண்டும். மற்ற (பி) பிரிவு மக்களுக்கு வழிபாட்டில் வழங்கும் அனைத்து உரிமைகளையும் 'ஏ' பிரிவிற்கு வழங்க வேண்டும். கலை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும். இதற்கு மற்ற பிரிவு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து அறந்தாங்கி தாசில்தார் ஆக. 19 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ