உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில்களுக்கு தானமாக தந்த பசுக்களில் சுயஉதவி குழுவுக்கு கொடுத்தது எத்தனை?: ஐகோர்ட் கேள்வி

கோவில்களுக்கு தானமாக தந்த பசுக்களில் சுயஉதவி குழுவுக்கு கொடுத்தது எத்தனை?: ஐகோர்ட் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கோவில்களுக்கு தானமாக வழங்கிய பசுக்களில், சுய உதவி குழுக்களுக்கு எத்தனை கொடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து, அறநிலைய துறை அறிக்கை அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'கோவில்களுக்கு தானமாக வழங்கும் கால்நடைகளை, தனி நபர்களுக்கு வழங்கக் கூடாது; அவற்றை முறையாக பராமரிக்கின்றனரா என்பதை கண்காணிக்க, குழு அமைக்க வேண்டும்; கால்நடைகளை பாதுகாக்க, உரிய விதிகளை வகுக்க வேண்டும்' என கோரியிருந்தார்.இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.ரங்கராஜன் நரசிம்மன் ஆஜராகி, “ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட, 100க்கும் மேற்பட்ட பசுக்களை, தனி நபர்களுக்கு அரசு வழங்கி உள்ளது. பால் கறக்காத பசுக்கள் விற்கப்படுவது குறித்து, புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை,” என்றார்.அறநிலையத் துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, “தானமாக வழங்கப்பட்ட பசுக்கள், பால் கறப்பதை நிறுத்திய பின், பூசாரி, அர்ச்சகர், சுய உதவி குழுக்கள், காப்பகங்களுக்கு அளிக்கப்படுகின்றன,” என்றார்.அப்போது, 'தானமாக வழங்கிய பசுக்களை, கோவில்கள் தான் பராமரிக்க வேண்டும். தனி நபர்களுக்கு வழங்கிய பசுக்கள், அவர்களிடம் தான் உள்ளனவா என்பதை யார் கண்காணிப்பர்?' என, முதல் பெஞ்ச் கேள்வி எழுப்பியது.அதற்கு, சிறப்பு பிளீடர் அருண் நடராஜன், “தானமாக வழங்கப்படும் பசுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அவை சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படுகின்றன,” என்றார். உடனே, “எந்த சுயஉதவி குழுவிடமும் பசுக்கள் இல்லை,” என, ரங்கராஜன் நரசிம்மன் பதில் அளித்தார்.இதையடுத்து, ஒவ்வொரு கோவிலிலும் தானமாக பசுக்கள் பெற, எண்ணிக்கை வரம்பு நிர்ணயிக்கலாம் எனத் தெரிவித்த முதல் பெஞ்ச், தானமாக வழங்கிய பசுக்களில், சுய உதவி குழுக்களுக்கு எத்தனை கொடுக்கப்பட்டன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, அறநிலைய துறைக்கு உத்தரவிட்டது. விசாரணையை, வரும் 29க்கு தள்ளி வைத்தது.அறநிலைய துறை இணை ஆணையர் மங்கையர்க்கரசி தாக்கல் செய்த பதில் மனுவில், 'கோவில்களில் பராமரிக்கப்படும் பசு காப்பகங்களை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளார்.'அவர், 123 காப்பகங்களை ஆய்வு செய்து, அறிக்கை அளித்துள்ளார். அதில் சுட்டிக்காட்டப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்ய, சம்பந்தப்பட்ட கோவில் அதிகாரிகளுக்கு, ஆணையர் உத்தரவிட்டுள்ளார்' என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Vivekanandan Mahalingam
ஏப் 04, 2024 10:38

சுய உதவி குழுக்களுக்கு தானமாக கொடுத்த பசுக்களை கொடுக்க என்ன அதிகாரம் இருக்கு - தானமாக கொடுத்த பசுக்கள் பால் கரந்தாலும் இல்லாவிட்டாலும் பராமரிக்க வேண்டிய பொறுப்பு கோவிலுக்கு உள்ளது


Dharmavaan
ஏப் 04, 2024 06:56

அறங்கெட்ட துறை திருடர்கள் லஞ்சத்துக்கு விற்றிருப்பான்கள் சுயஉதவி குழு என்ற பெயரில் இதற்கு எந்த ரெக்கார்டும் இருக்காது ஏமாற்று வேலை கோயில்தான் இதை பராமரிக்க வேண்டும் திருப்பதி தேவஸ்தானம் செய்கிறது


Kasimani Baskaran
ஏப் 04, 2024 05:27

கோவிலுக்கு நேர்ந்து விட்ட பசுக்களை எப்படி இவர்கள் சுய உதவிக்குழுக்களுக்கு தானமாகக்கொடுக்கலாம்? கோவிலில் அறங்காவலர்கள் இல்லையா அல்லது இந்து அறநிலையத்துறைதான் அறங்காவலரா? குறிப்பிட்ட காலத்துக்குள் கோவில் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறையால் சீர் செய்ய முடியவில்லை என்றால் கோவில் நிர்வாகம் நேரடியாக நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் வந்து விட வேண்டும் நிரந்தரமாக கோவில் நிர்வாகத்தை கையிலெடுக்க இந்து அறநிலையத்துறைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடையாது


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ