மேலும் செய்திகள்
பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை பலி
2 hour(s) ago
சென்னை:கழுகுகள் உயிரிழக்க காரணமாக உள்ள, தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்கப்படுகிறதா என்பது குறித்து, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூர்யகுமார், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில் பிணந்தின்னிக் கழுகுகள் அதிகமாக உள்ள கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் உள்ள கால்நடைகளுக்கு, நிம்சுலைட், ப்ளூனிக்சின், கார்ப்ரோபென் போன்ற மருந்துகளை செலுத்தப்படுகின்றன. மருந்துகள் செலுத்தப்பட்ட விலங்குகள் இறந்த பின், அவற்றின் மாமிசத்தை சாப்பிடும் கழுகுகள் அதிகம் உயிரிழக்கின்றன. கழுகுகள் அதிகமுள்ள மாவட்டங்களில், குறிப்பிட்ட மூன்று மருந்துகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி கே.குமரேஷ்பாபு அடங்கிய, 'முதல் அமர்வு' முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மருந்துகள், சந்தையில் இன்னும் எளிதில் கிடைக்கின்றன' என்று, தெரிவிக்கப்பட்டது.அப்போது, 'மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்க அனுமதிக்கப்படவில்லை. தடை செய்யப்படாத மேலும் மூன்று மருந்துகளின் விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவற்றை தடை செய்வது குறித்து, மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும்' என, தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.இதையடுத்து, 'கால்நடைகளுக்கான மருந்துகளுக்கு தடை விதித்தால், அந்த மருந்துகள் இன்றி கால்நடைகள் இறக்க வாய்ப்புள்ளது. அதனால், பாதிக்கப்படும் விவசாயிகளின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்கப்படுகிறது என்ற மனுதாரரின் குற்றச்சாட்டு; மாற்று மருந்துகள் தொடர்பாக விரிவான அறிக்கையை, தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
2 hour(s) ago