| ADDED : ஜூலை 05, 2024 01:23 AM
வடலுார்:காங்., தற்போது வலிமை பெறவில்லை என்றால், எந்த காலத்திலும் வளர முடியாது என தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை பேசினார்.வடலுாரில் நடந்த கடலுார் மாவட்ட காங்., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:தேர்தலுக்கு மட்டுமே கூட்டணி வைத்துள்ளோம். இனி கட்சியை வலிமைப்படுத்தி, கட்டமைப்பை பலப்படுத்துவதை குறிக்கோளாக கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்தியா கூட்டணி வலிமை பெறும். எல்லா மக்களுக்குமான கட்சி தான் காங்., நாடாளுமன்றத்தில் காங்., தலைவர் ராகுலின் பேச்சை கேட்ட இளைஞர்கள் காங்., கட்சிக்கு வர தயாராக உள்ளனர்.தற்போது வலிமை பெறவில்லை என்றால், எந்த காலத்திலும் வளர முடியாது. அதேபோல் அடுத்த தலைமுறைக்கும் வழிகாட்ட முடியாது. அதனால் தற்போது காங்., கட்சியை வலிமைப்படுத்த வேண்டும்.காங்., கட்சிக்கு என்ன வரலாறு உள்ளது என பா.ஜ., அண்ணாமலை கேட்கிறார். அவருக்கு தான் வரலாறு தெரியாது. காங்., வரலாறு நேர்மையான, மக்களுக்கான வரலாறு. பா.ஜ., வரலாறு தேசத்துக்கு விரோதமானது என்றார்.கூட்டத்தில் முன்னாள் தலைவர் அழகிரி பேசுகையில், நாடாளுமன்றத்தில் ராகுலின் பேச்சு, பல நாட்டு தலைவர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ராகுல் இந்து மதத்தை தாக்கி பேசவில்லை. காந்தி இருந்தால் எதை பேசி இருப்பாரோ அதை தான் ராகுல் பேசியுள்ளார்.ராகுல் பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் சிறப்பாக செயல்படுகிறார். மாற்றமும் வேண்டும், வளர்ச்சியும் வேண்டும். காங்., கட்சியை வளர்க்க கொள்கையில் தெளிவாக இருந்தால், காங்., கட்சியை விட சிறந்த கட்சி கிடையாது என்றார்.