சென்னை:சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா எடுத்துச் சென்ற விவகாரத்தில், உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்ததை எதிர்த்து, சட்டசபை செயலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., - - எம்.எல்.ஏ.,க்கள் தரப்பில் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.கடந்த 2017ம் ஆண்டில், அ.தி.மு.க., ஆட்சியின்போது, சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா எடுத்துச் சென்றதாக, அப்போதைய எதிர்கட்சித் தலைவரும் தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக, உரிமை மீறல் நோட்டீசை, உரிமைக்குழு அனுப்பியது. இதை எதிர்த்து, ஸ்டாலின் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்தது. இதை எதிர்த்து, சட்டசபை செயலர் மற்றும் உரிமைக்குழு சார்பில், மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், குமரப்பன் அமர்வு, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்திருந்தது. இந்நிலையில், அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ''இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக உள்ள தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு நோட்டீஸ் சென்று சேரவில்லை,'' என்றார்.இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதைத்தொடர்ந்து, வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தரப்பில், வழக்கறிஞர் மனுராஜ் ஆஜராகி, ''எம்.எல்.ஏ.,வாக இருந்த கு.க.செல்வம், காலமாகி விட்டார். மற்றவர்கள் தரப்பில் வாதங்களை எடுத்து வைக்க, அனுமதிக்க வேண்டும்,'' என்றார். அதை ஏற்று, அனுமதி வழங்கிய நீதிபதிகள், விசாரணையை, வரும் 29க்கு தள்ளி வைத்தனர்.