சென்னை:தமிழக நெடுஞ்சாலைத் துறை வாயிலாக, 66,000 கி.மீ., சாலைகள் பராமரிக்கப்படுகின்றன. துறையில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு வாயிலாகவே, 90 சதவீத பணிகள் நடக்கின்றன. இப்பதவியை பிடிப்பதற்கு இன்ஜினியர்கள் மத்தியில் பெரும் போட்டி ஏற்படுவது வழக்கம். அ.தி.மு.க., ஆட்சியில், முதல்வராக இருந்த பழனிசாமி கட்டுப்பாட்டில் நெடுஞ்சாலைத் துறை இருந்தது. அப்போது, சாலை பணிகளுக்கு மற்ற துறைகளை காட்டிலும், பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதனால், நெடுஞ்சாலைத் துறை இன்ஜினியர்கள் பலரும் தங்களது பினாமி பெயரில் ஒப்பந்தங்களை எடுத்து, அரசு பணிகளை செய்தனர். இன்ஜினியர்களிடம் இருந்து கமிஷன் சரியாக வந்ததால், அப்போது யாரும் கண்டுக்கொள்ளவே இல்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இன்ஜினியர்கள் பலரும் மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், பணியிடமாற்றம் செய்த பின்னும், ஒப்பந்த பணிகளை அதிகாரிகள் எடுத்து செய்கின்றனர். கோவையில் இதுபோன்று கான்ட்ராக்டர்களுக்கு பணி வழங்கப்பட்டு உள்ள செய்தி, நம நாளிதழில், 2ம் தேதி வெளியானது. இந்த செய்தியை தொடர்ந்து, அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து, உண்மை நிலை குறித்து முழு விசாரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை அளிக்க, நெடுஞ்சாலைத் துறை திருச்சி கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி தலைமையில் மூன்று பொறியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் இம்மாத இறுதிக்குள் விசாரணை அறிக்கையை, அமைச்சரிடம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.