உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாட்கோவில் கடன் பெறுவது எளிதல்ல விண்ணப்பித்து ஏமாந்தவர்கள் குமுறல்

தாட்கோவில் கடன் பெறுவது எளிதல்ல விண்ணப்பித்து ஏமாந்தவர்கள் குமுறல்

சென்னை,: 'ஆதிதிராவிட மக்கள் எளிதாக கடன் பெற, மாவட்டம் தோறும், 'ஆதிதிராவிடர் மேம்பாட்டு கூட்டுறவு வங்கி' அமைத்து, அதன் வழியே தாட்கோ நிறுவனம் மானியத்துடன் கூடிய கடன்களை வழங்க வேண்டும்' என, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் சமூகத்தினரின் பொருளாதார நிலையை மேம்படுத்த, தாட்கோ நிறுவனம் சார்பில், பல்வேறு திட்டங்கள் வழியே, 35 சதவீத மானியத்துடன், பொதுத்துறை வங்கி வாயிலாக குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், அந்த கடன்களை பெறுவதில், பல்வேறு சிக்கல்கள் தொடர்கின்றன.

செலவிட முடியல

குறிப்பாக, தாட்கோ நிறுவனம் மானியம் வழங்க முன் வந்தாலும், பொதுத்துறை வங்கிகள் எளிதாக கடன் வழங்குவதில்லை. இதனால், மானியம் வழங்குவதற்காக தாட்கோ நிறுவனத்திற்கு, அரசு ஒதுக்கும் நிதியை முழுமையாக செலவிட முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, அரசு திட்டங்கள் வழியே ஆதிதிராவிட மக்கள் பயன் பெற, தமிழக அரசு மாவட்டம் தோறும், 'ஆதிதிராவிடர் மேம்பாட்டு கூட்டுறவு வங்கியை' அமைத்து, அதன் வழியாக, மானியத்துடன் கூடிய கடன்களை வழங்க வேண்டும் என, அம்பேத்கர் மக்கள் கழகம் உட்பட பல்வேறு அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.இது குறித்து, தாட்கோவில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ள சிலர் கூறியதாவது:தற்போதைய சூழலில், சுய தொழில் துவங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்காக, அரசு வழங்கும் மானியத்துடன் கூடிய கடன் பெற, தாட்கோவிலும், அங்கீகரிக்கப்பட்ட பொதுத்துறை வங்கியிலும் விண்ணப்பிக்கிறோம். ஆனால், ஆதிதிராவிடர்கள், பொதுத்துறை வங்கிகளில் கடன் பெறுவது கடினமாக உள்ளது. வங்கி அதிகாரிகள், பல்வேறு காரணங்களை கூறி விண்ணப்பங்களை நிராகரித்து விடுகின்றனர். சில நேரங்களில் விண்ணப்பம் ஏற்கப்பட்டாலும், தாட்கோ இடைத்தரகர்கள் மற்றும் வங்கி அதிகாரிகளின் அலட்சியத்தால் கடன்கள் மறுக்கப்படுகின்றன. தாட்கோ வாயிலாக கடன் பெற விண்ணப்பிக்கும் பத்து பேரில், ஏழு பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. அரசியல் பிரமுகர்கள் பரிந்துரை, இடைத்தரகர்கள் உதவியுடன் செல்வோருக்கு மட்டுமே, தாட்கோவில் கடன் வழங்கப்படுகிறது. கடன் பெறுவதற்கு முன்னரே, இடைத்தரகர்கள் தங்களின் பங்கை வசூலிப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். எனவே, தமிழக அரசு, தாட்கோவின் உண்மை தன்மையை, வெளிப்படுத்தும் வகையில், மாவட்டம் தோறும், ஆதிதிராவிடர் மேம்பாட்டு கூட்டுறவு வங்கியை நிறுவி, அவற்றை முறையாக கண்காணிக்க, அதிகாரிகளை நியமித்து, கடன்களை வழங்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

சொத்து மதிப்பு

தாட்கோ அதிகாரிகள் சிலர் கூறுகையில், ''தாட்கோ வாயிலாக பொதுத்துறை வங்கியில் கடன் பெற, 2023 - 2024ம் ஆண்டில் விண்ணப்பித்த, 30,000க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களில், 13,000 பேருக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது. ''நாங்கள் அதிகம் நிராகரிப்பதில்லை. நாங்கள் பரிந்துரைக்கும் விண்ணப்பங்களை, வங்கி அதிகாரிகள் சில காரணங்களை கூறி நிராகரிக்கின்றனர்.''நடப்பாண்டில் பெறப்பட்ட விண்ணப்பங்களில், தேர்வான நபர்களுக்கு கடன்களை வழங்கி வருகிறோம். கடன் பெற விண்ணப்பிக்கும் நபரின், 'சிபல் ஸ்கோர்' மற்றும் ஆண்டு வருமானம், சொத்துமதிப்பு உள்ளிட்டவற்றை சரிபார்த்த பிறகே, தகுதியான நபர்களுக்கு வங்கியில் கடன் வழங்கப்படுகிறது,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

rama adhavan
பிப் 24, 2025 09:31

1990களில் திருப்பூர் அருகே முதலிப்பாளயத்தில் அரசு தொழில் நிறுவனத்தின் மூலம் நூல் ஆடை தொழில் துவங்க கொடுக்கப்பட்ட சில நூறு கோடிகள் எல்லாம் வராக் கடன். எதை நம்பி வங்கிகள் கடன் தரும்?


SIVA
பிப் 24, 2025 08:20

டாஸ்மாக் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கொடுத்த தான் சரக்கு , இதுல உங்களுக்கு கமிஷன் இல்லாம கடன் வேணும் , அதுக்கு முதல காசு வாங்கமா ஓட்டு போடணும் , காசு வாங்கினாலும் யார் நல்ல மனிதாரோ அவருக்கு ஓட்டு போடணும் , ஓட்டுக்கு பணம் என்பதை லஞ்சம் மக்களால் மட்டுமே ஒழிக்க முடியும் , காசு கொடுத்தாலும் ஜெயிக்க முடியாது என்று தெரிந்து விட்டால் கெட்டவன் வேறு தொழில் செய்ய கிளம்பி விடுவான் ....


Kasimani Baskaran
பிப் 24, 2025 06:50

இந்நேரம் சிதம்பரம் செ பதவியில் இருந்திருந்தால் யார் கேட்டாலும் கமிஷனுக்கு கடன் கொடுத்து இருப்பார். பொதுவாகவே கீழ்மட்டத்தில் இருப்பவர்கள் கடனை முழுவதுமாக திருப்பி செலுத்தி விடுவதாகவே அறிகிறேன். பெரும்பாலானோர் உத்வேகத்துடன் உழைப்பதால் நல்ல நிலையை அடைந்து விடுகிறார்கள்.


அப்பாவி
பிப் 24, 2025 06:39

கடன் வாங்கிட்டு பெரும்பாலோர் திருப்பிக் கட்டுவதில்லை. முத்ரா கடன் வாங்குனவங்க திருப்பி கட்டுறாங்களா என்பதும் சந்தேகமே. அதுக்குத்தான் முத்தாய்ப்பா வாராக்கடன் வங்கி ஆரம்பிச்சு அதிலே சேர்த்துடறாங்க.


மால
பிப் 24, 2025 02:34

தாட் கோவில் மட்டுமல்ல அனைத்திலும் தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை