உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜெ., மரணத்தை விசாரிக்க பழனிசாமி முட்டுக்கட்டை

ஜெ., மரணத்தை விசாரிக்க பழனிசாமி முட்டுக்கட்டை

சென்னை:'மக்களின் நம்பிக்கையை முழுதுமாக இழந்து, தொடர் தோல்வியை சந்தித்து வரும் பழனிசாமி, சொந்த கட்சியினரிடமும் செல்வாக்கை இழந்து விட்டார்' என, தி.மு.க., முதன்மை செயலரான அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில், அ.தி.மு.க., உண்ணாவிரத போராட்டம் நடத்தி இருக்கிறது; சி.பி.ஐ., விசாரணை கோரி உள்ளது.

உண்ணாவிரதம்

ஏழு ஆண்டுகளுக்கு முன், அதே இடத்தில், 2017 மார்ச் 8ல், ஜெயலலிதா மரணத்திற்கு சி.பி.ஐ., விசாரணை கேட்டு பன்னீர்செல்வம் உண்ணாவிரதம் இருந்தார். அது, பழனிசாமிக்கு நினைவிருக்கிறதா. தலைவியின் மர்ம மரணத்தில், சி.பி.ஐ., விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்டவர் பழனிசாமி.அ.தி.மு.க., ஆட்சியில், 4,800 கோடி ரூபாய் நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு நடந்தது. பழனிசாமியின் உறவினர்களுக்கு ஒப்பந்தப் பணிகள் முறைகேடாக அளிக்கப்பட்டன. லஞ்ச ஒழிப்பு துறையிடம் தி.மு.க., மனு அளித்தது. அதன் மீது லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை எடுக்காததால், உயர்நீதிமன்றத்தில் தி.மு.க., வழக்கு போட்டது. அந்த வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதும் பழனிசாமி பதறினார்.அன்று சி.பி.ஐ.,க்கு பயந்து, உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டியவர், இன்று கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு, சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என்கிறார். கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு, முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என, பழனிசாமி கூறியுள்ளார். அவர் பொறுப்பிற்கு வந்த பின், ஒரு தேர்தலிலும் அ.தி.மு.க., வெற்றி பெறவில்லை. அதனால் தான் முதல்வரை ராஜினாமா செய்யச் சொல்கிறார். ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடிய 13 பேரை, துாத்துக்குடியில் சுட்டுக் கொன்ற விவகாரம்; பொள்ளாச்சியில் நுாற்றுக்கணக்கான இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம்; கோடநாடு கொலை, கொள்ளை; சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் தந்தை மகன் லாக்அப் கொலை சம்பவங்களில் எல்லாம் பழனிசாமி ராஜினாமா செய்தாரா?கள்ளச்சாராயம் நிச்சயம் தடுக்கப்பட வேண்டும். அதில், யாருக்குமே மாற்று கருத்து இருக்க முடியாது. இந்தியா முழுதும் எல்லா மாநிலங்களிலும், கள்ளச்சாராய மரணங்கள் நடக்கின்றன. அதில், தமிழகம் கடைசி இடத்தில் தான் இருக்கிறது.

ராஜினாமா

மக்களின் நம்பிக்கையை முழுதுமாக இழந்து, தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பழனிசாமி, சொந்த கட்சியினரிடமும் செல்வாக்கை இழந்து விட்டார். இதை திசை திருப்பி தன் இருப்பை தக்க வைக்கவே, முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என, வீராவேசம் காட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறார். யார் காலையும் பிடித்து ஸ்டாலின் முதல்வராகவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்கிறார். எனவே, பழனிசாமி பகல் கனவு காண்பதை நிறுத்திவிட்டு, பா.ஜ.,விடம் அடகு வைக்கப்பட்டு, தற்போது மூழ்கும் கப்பலாக உள்ள, தன் கட்சி குறித்து கவலைப்படும் வேலையை பார்க்கலாம்.இவ்வாறு நேரு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை