உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டைப் 1 நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வழிகாட்டும் இணையதள பதிவேடு துவக்கம்

டைப் 1 நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வழிகாட்டும் இணையதள பதிவேடு துவக்கம்

சென்னை:''டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவர்கள் அதிகம் இருக்கும் நாடாக, இந்தியா இருப்பது வருத்தம் அளிக்கிறது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.அமைச்சர் கூறியதாவது:இந்தியாவிலேயே முதன்முறையாக மாநில அளவிலான முதல் வகை நீரிழிவு நோய்க்கான இணையதள பதிவேட்டை தமிழகம் துவங்கி உள்ளது.இணையதள பதிவேட்டின் நோக்கம் என்பது, அவர்களது சுகாதார நலனை கவனித்து சிகிச்சை அளிப்பதும், அவர்களின் வாழ்வாதாரம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை கண்காணிப்பதாகும்.முதல் வகை நீரிழிவு நோயால், உடலில் இன்சுலின் உற்பத்தி குறைவு ஏற்பட்டு, கணையத்தை பாதிக்கிறது.ரத்தத்தின் சர்க்கரை அளவை பராமரிக்க, இன்சுலின் ஒரே வழியாக இருக்கிறது. முதல் வகை நீரிழிவு நோய் என்பது பெரும்பாலும், குழந்தைகளையும், வளரிளம் மற்றும் இளம் வயதினரையும் பாதிக்கிறது. அனைத்து வயதினரையும் பாதிக்கும், டைப் 1 நீரிழிவு நோய்க்கு, இன்சுலின் சிகிச்சை முறையாக அளிக்கப்படவில்லை என்றால், தீவிர பாதிப்புகள் ஏற்படும். இதனால், சிறுநீரகங்கள், நரம்புகள், கண் போன்ற உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.முதல் வகை நீரிழிவு நோயால், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் அதிகமாக பாதிக்கக்கூடிய நாடாக, இந்தியா இருப்பது வருத்தம் அளிக்கிறது.10 வயதில் ஒரு இந்தியர் முதல் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டால், அவரது சராசரி வாழ்க்கை 32 ஆண்டுகளாக உள்ளது. அதேநேரம், வளர்ந்த நாடுகளில் முதல் வகை நீரிழிவு நோயால் வாழ்பவர்களின் காலம், 70 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. உணவு முறை, தீவிர உடற்பயிற்சி இருந்தால் நீரிழிவு நோய் பற்றி பயப்பட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

கையேடு சொல்வது என்ன?

குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கு ஏற்படும் முதல் வகை நீரிழிவு நோய் குறித்த கையேட்டில், குழந்தைகளுக்கு அளிக்க கூடிய உணவு முறைகள், சர்க்கரை அளவு, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் இடம்பெற்றுள்ளன.அதில் கூறப்பட்டுள்ளதாவது:முதல் வகை நீரிழிவு நோய் பாதித்தால் அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக தாகம், அதிக பசி, உடல்சோர்வு, எடை குறைவு, தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். உணவு சாப்பிடுவதற்கு முன் சர்க்கரையின் அளவு, 126க்கு மேல், சாப்பிட்ட பின் 200க்கு மேல் இருந்தால், அது நீரிழிவு நோயாக கருதப்படும்.அதேபோல், தினசரி உணவில் 50 சதவீதம் மாவு சத்து எடுத்து கொள்ளுதல் அவசியம். சளி, காய்ச்சல் தொந்தரவு இருந்தாலும், குழந்தைகளுக்கு உணவு, தண்ணீர் கொடுப்பது அவசியம். அதேபோல், இன்சுலின் செலுத்துதல் முக்கியம். மேலும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை விளையாட அனுமதிக்கலாம். அதற்கு முன், சர்க்கரை அளவை பரிசோதித்து, 100 மி.கி., அளவிற்கு குறைவாக இருந்தால், அவர்களுக்கு சிறிய அளவு உணவு உட்கொள்ள கொடுக்க வேண்டும்.இவர்கள் சராசரி திருமண வாழ்க்கை வாழ முடியும். இன்சுலின் ஊசியை, இடுப்பு மற்றும் கால் தொடை என, இரண்டு பகுதியில் வீக்கம் வராமல் இருக்க, சுழற்சி முறையில் செலுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை