உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 9 ஆண்டுகளாக ஏமாற்றுகிறார் கமல் மீது லிங்குசாமி புகார்

9 ஆண்டுகளாக ஏமாற்றுகிறார் கமல் மீது லிங்குசாமி புகார்

சென்னை:ஒப்பந்தம் செய்தபடி, 30 கோடி ரூபாயில் படம் தயாரித்து, நடித்து கொடுக்காமல் ஏமாற்றி வருவதாக, நடிகர் கமல் மீது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில், இயக்குனர் லிங்குசாமி நிறுவனம் புகார் அளித்துள்ளது.புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:திரைப்பட இயக்குனர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர், 'திருப்பதி பிரதர்ஸ்' என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறோம்.இந்நிறுவனம் சார்பில், 2013ல், புதிய படம் ஒன்றை தயாரிப்பது தொடர்பாக, நடிகர் கமலை அணுகினோம். கமல் சொன்ன கதையை படமாக்குவது என்று முடிவானது.அந்த படத்தை கமலின், 'ராஜ்கமல் இண்டர்நேஷனல்' நிறுவனம் வாயிலாக, திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு, 50 கோடி ரூபாயில் தயாரிப்பது என, தீர்மானிக்கப்பட்டது. வெளிநாடு மற்றும் வடமாநிலங்களில் திரையிடும் உரிமையை கமல் எடுத்துக் கொண்டார். அதற்கான தொகை போக மீதமுள்ள, 35 கோடியை எங்கள் நிறுவனம் வாயிலாக தருவது என ஒப்பந்தம் செய்து, அன்றே முன்பணமாக, 15 கோடி ரூபாயை கொடுத்தோம்.திடீரென கமல், எங்களிடம் தெரிவித்த கதையை படமாக்க விரும்பவில்லை. வேறு கதை ஒன்றை கூறினார். அது எங்களுக்கு பிடிக்கவில்லை.அந்த காலகட்டத்தில் வெற்றிகரமாக ஓடிய, 'திரிஷ்யம்' என்ற மலையாள படத்தை, தயாரித்து, நடித்து தரும்படி கேட்டோம். அவர் மறுத்து விட்டு, வேறு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்தார்.என் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா என கூறியவர், 'உத்தம வில்லன் என்ற படத்தை, ரமேஷ் அரவிந்த் வாயிலாக இயக்கி தருகிறேன். அதில் நஷ்டம் ஏற்பட்டால் நான் முழுதும் ஏற்கிறேன்' என, உறுதியும் அளித்தார். அவரை நம்பி மீதமுள்ள, 20 கோடி ரூபாயும் கொடுத்தோம். அந்த படத்தை திரையிட்டு காட்டிய போது, எங்களுக்கு பிடிக்கவில்லை. இந்த படத்தால், பொருளாதார ரீதியாக எங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதற்காக, 30 கோடி ரூபாயில் புதிய படம் ஒன்றை தயாரித்து, நடித்து கொடுப்பதாக கமல் கூறினார். ஒன்பது ஆண்டு களாகியும் ஏமாற்றி வருகிறார்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை