சுயநிதி கல்லுாரிகளை கொண்டு வந்து உயர்கல்வியை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்., வி.ஐ.டி., வேந்தர் ஜி.விஸ்வநாதன் பேச்சு
சென்னை:“தமிழகத்தில் சுயநிதிக் கல்லுாரிகளை கொண்டு வந்து, உயர்கல்வியை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.,” என, வி.ஐ.டி., வேந்தர் ஜி.விஸ்வநாதன் பேசினார்.வேலுார் வி.ஐ.டி., பல்கலையில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. வி.ஐ.டி., துணைத் தலைவர் சங்கர் விஸ்வநாதன் வரவேற்றார். துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் நோக்கவுரை நிகழ்த்தினார்.நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற வி.ஐ.டி., வேந்தர் ஜி.விஸ்வநாதன் பேசியதாவது:தமிழகத்தில் சுயநிதி கல்லுாரிகளை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்., அதனால் உருவானதுதான் வி.ஐ.டி., பல்கலை. இங்கு, 70 நாடுகளில் இருந்து, ஒரு லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவக்கியபோது, 'ஒரு மொழியை அழித்து, இன்னொரு மொழி வளரக் கூடாது; மக்களின் விருப்பத்தால் வளர வேண்டும்' என்றார். கடந்த 1968ல் நான் எம்.பி.,யாக இருந்தேன். அப்போது உருவாக்கப்பட்ட மொழிக் கொள்கை தீர்மானத்தில், 'ஹிந்தி பேசாத மாநிலங்களில், மாநில மொழி, ஆங்கிலம், ஹிந்தி படிக்க வேண்டும்; ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஆங்கிலத்துடன், ஏதாவது ஒரு தென்மாநில மொழியை படிக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டது. ஆனால், இதுவரை எந்த தென் மாநில மொழியையும், ஹிந்தி பேசும் மாநிலங்கள் கற்பிப்பதில்லை.தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் என்பது, எம்.ஜி.ஆரின் கொள்கை. 'எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள், மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிட்டால் திரும்ப பெறும் உரிமை. இடைத்தேர்தல் நடத்தி பொருளாதாரத்தை வீணடிக்காமல், ஆளுங்கட்சிக்கே உரிமை தருவது; அரசில் தொடர்பில்லாதவர் தலையீட்டை தடுப்பது; கருப்புப் பணத்தை ஒழிக்க, 100 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது' என, பல்வேறு கருத்துகளை கூறியவர் எம்.ஜி.ஆர்.,ஜாதி, மதம் குறித்த கவலை இல்லாமல் ஆட்சி நடத்தியவர் எம்.ஜி.ஆர்., நாட்டின் வளர்ச்சிக்கு உயர் கல்வி அவசியம். இந்தியா அதில் பின்தங்கியுள்ளது. அதை மாற்ற, அனைவருக்கும் இலவச உயர் கல்வியை அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசியதாவது:தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியமைக்க காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர்., தஞ்சையில் தமிழ் பல்கலையை நிறுவியவர். அரசாணைகளில் தமிழில் கையொப்பம் இடும் நடைமுறையை கொண்டு வந்தார். மொழிக் கொள்கையில் பிடிவாதமாக இருந்த அவர், பொருளாதார கொள்கைகளில் மத்திய அரசுடன் இணக்கமாகவும், ராஜதந்திரமாகவும் செயல்பட்டு, தமிழகத்துக்கான நிதியை பெற்றார்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன் பேசுகையில், “தன் சிகிச்சைக்கு கூட அரசு நிதியை பயன்படுத்தாதவர் எம்.ஜி.ஆர்., அவர் மறைவுக்கு பின் கட்சி பிளவுபட்டு, மீண்டும் இணைந்து ஆட்சியை பிடித்தது. தற்போது, பிளவுபட்டுள்ளது. கட்சியில் இருந்து யாரையும் ஒதுக்காமல் மீண்டும் இணைத்து, வெற்றி பெற வேண்டும்,” என்றார்.அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வீரமணி, பாண்டுரங்கன், அரக்கோணம் எம்.எல்.ஏ., ரவி, மாவட்ட செயலர்கள் அப்பு, வேலழகன், சுகுமார், வி.ஐ.டி., துணை வேந்தர் காஞ்சனா பாஸ்கரன், பதிவாளர் ஜெயபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.வேலுார் வி.ஐ.டி.,யில் நடந்த எம்.ஜி.ஆர்., நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில், அவருடைய சிலை மற்றும் புகைப்படத்துக்கு வி.ஐ.டி., வேந்தர் விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர்கள் சுவாமிநாதன், பொன்னையன், வீரமணி, பாண்டுரங்கன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். அருகில், வி.ஐ.டி., துணைத் தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன், செல்வம், துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன் மற்றும் பதிவாளர் ஜெயபாரதி.