| ADDED : ஜூன் 01, 2024 03:45 AM
சென்னை : கோடை வெயிலின் தாக்குதலில் இருந்து யானைகளை காப்பாற்றும் வகையில், திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் முகாமில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் ஆகிய இடங்களில் யானைகள் முகாம்கள் உள்ளன. இந்த முகாம்கள் மலைப்பகுதிகளில் அமைந்துள்ளதால், கோடையின் தாக்கத்தை சமாளிக்க முடிகிறது. இவை தவிர, திருச்சி எம்.ஆர்.பாளையம் பகுதி யில் யானைகள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இது, இன்னும் முறையான யானைகள் முகாமாக மாற்றப்படாமல் உள்ளது. இருப்பினும் இங்கு, 10க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. அதனால், எம்.ஆர்.பாளையம் முகாமில் உள்ள யானைகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்ந்தால், யானைகளுக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இங்கு குளுமையான சூழலை ஏற்படுத்த, நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹு, சமூக வலைதளம் வாயிலாக வெளியிட்ட அறிவிப்பு: கோடை காலத்தில் திருச்சி முகாமில், வெப்ப அழுத்தத்தால் யானைகள் பாதிக்கப்படும் நிலை ஏற் படுகிறது. இதை சமாளிக்கும் வகையில் அங்கு, 'ஓவர் ஹெட் பாகிங்' எனப் படும் நவீன தெளிப்பான் அமைக்கப்பட்டுஉள்ளது. புகை அடிப்பது போன்று, இங்குள்ள கருவிகள் வாயிலாக தண்ணீர் மெல்லிய சாரலாக தெளிக்கப்படும். இவ்வாறு தொடர்ந்து தெளிக்கப்படும் நிலையில், யானைகள் உள்ள பகுதியில் இதற்கான நவீன தெளிப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், யானைகள் தங்க வைக்கப்படும் பகுதியில், வெப்பநிலை இயல்பான அளவில் இருந்து, 3 டிகிரி செல்ஷியஸ் வரை குறைய வாய்ப்புள்ளது. இது, வெப்ப அழுத்த பாதிப்பில் இருந்து யானைகள் தப்பிக்க பேருதவியாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.