உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சூரில் தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது

திருச்சூரில் தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது

போலி ஆவணம் வாயிலாக, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் அபகரிப்பு, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கேரளாவில் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், 50; தொழில் வர்த்தகர். அவர், கரூர் டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், 'கரூர் அருகே, தோரணகல்பட்டி, குன்னம்பட்டி பகுதியில், எனக்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்பிலான, 22 ஏக்கர் நிலம் உள்ளது.

பத்திரப்பதிவு

அந்த நிலத்தை, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் மற்றும் ஆதரவாளர்கள், போலி ஆவணங்கள் வாயிலாக பத்திரப்பதிவு செய்து அபகரித்து விட்டனர்' என, கூறியுள்ளார். எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேகர் உள்ளிட்ட ஆறு பேர் மீது, நில மோசடி உட்பட எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் அவர்களை தேடி வந்தனர். இதற்கிடையே, ஜூன் 14ம் தேதி, பொறுப்பு மேலக்கரூர் சார் - பதிவாளர் முகமது அப்துல் காதர் என்பவரும், கரூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், 'போலி சான்றிதழ் கொடுத்து பத்திரப்பதிவு செய்தோர் மற்றும் என்னை மிரட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறியுள்ளார்.

விசாரணை

இதுகுறித்து போலீசார் விசாரித்து, எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர் யுவராஜ், பிரவீன், ரகு உட்பட, ஏழு பேர் மீது, எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இரண்டு வழக்குகளிலும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில், சார் - பதிவாளர் புகார் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். ஐ.ஜி., அன்பு தலைமையில் கரூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலைமறைவாக இருந்ததால், தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

நிலுவை

இந்த இரு வழக்குகளிலும் முன்ஜாமின் கோரி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுக்கள், கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.இந்நிலையில், 35 நாட்களுக்கு மேல் தலைமறைவாக உள்ள, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகியோர், கேரள மாநிலம், திருச்சூரில் பதுங்கி இருப்பதாக தெரியவந்தது. இருவரையும் நேற்று காலை, 9:00 மணியளவில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். கரூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.- நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை