| ADDED : ஆக 03, 2024 12:29 AM
சென்னை:தமிழகத்தில் முழுமை திட்டம் உருவாக்கப்பட்டுள்ள, 56 நகரங்களில் நில வகைப்பாடு விபரங்களை பொதுமக்கள் எளிதாக அறியும் வகையில், புதிய தகவல் தொகுப்பு உருவாக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை பெருநகர் பகுதிக்கு முழுமை திட்டம் உருவாக்கப்பட்டு, அதன் அடிப்படையில், நில வகைப்பாடு விபரங்கள் வரையறுக்கப்பட்டன. சர்வே எண் வாரியாக வரையறுக்கப்பட்ட இந்த விபரங்களை, 'ஆன்லைன்' முறையில் பொது மக்கள் அறிய வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு வெளியில் நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், நில வகைப்பாடு விபரங்கள் அறிய போதிய வசதிகள் இல்லை. இந்நிலையில், டி.டி.சி.பி., கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான பகுதிகளுக்கு முழுமை திட்டங்கள் இல்லாததால், நில வகைப்பாடு விபரங் கள் வரையறை செய்யப்படாமல் உள்ளன. இந்நிலையில், மத்திய அரசின் நிபந்தனை காரணமாக, பல்வேறு நகரங்களுக்கு முழுமை திட்டங்கள் தயாரிக்கப் பட்டு வருகின்றன. குறிப்பாக மாநகராட்சிகள், நகராட்சிகள் போன்ற பகுதிகளுக்கு முழுமை திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பல்வேறு நகரங்களுக்கு முழுமை திட்டம் தயாரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதில், குறிப்பிட்ட சில நகரங்களின் முழுமை திட்டங்களுக்கு, அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சில நகரங்களின் திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. இத்துடன், 56 நகரங்களுக்கான முழுமை திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நகரங்களில் நில வகைப்பாடு விபரங்களை பொது மக்கள் அறிவதற்கான புதிய தகவல் தொகுப்பு உருவாக்கப்படும். இதனால், பொது மக்கள் தங்கள் நிலங்களின் வகைப்பாடு என்ன, அதில் குடியிருப்பு கட்டலாமா, வணிகம் அல்லது தொழில் கட்டடங்கள் கட்டலாமா என்பதை எளிதாக அறிய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.