சென்னை:''தி.மு.க.,வுக்கு ஓட்டளித்தது வீண் என்பதை மக்கள் உணர்ந்து விட்டனர். எனவே, அ.தி.மு.க., கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், கட்சியின் இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின், அவர் அளித்த பேட்டி:அ.தி.மு.க.,வுக்கு நெருக்கடி என்ற பேச்சுக்கே இடமில்லை. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், அமலாக்கத் துறை சோதனை நடத்துவதை, நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம். ஏற்கனவே, லஞ்ச ஒழிப்பு துறை வழியே மாநில அரசு வழக்குப் பதிவு செய்தது. மத்திய அரசு, வருமான வரித்துறை சோதனை நடத்தியது. தற்போது, அமலாக்கத்துறை சோதனை நடத்தி உள்ளது.முன்னுரிமைலோக்சபா தேர்தலில் பெண்கள் விருப்பப்பட்டு வாய்ப்பு கேட்டால், வெற்றி வாய்ப்பு அடிப்படையில் வழங்குவோம். பெண்களுக்கு அ.தி.மு.க., முன்னுரிமை கொடுக்கும் கட்சி. எங்கள் கூட்டணியில், எஸ்.டி.பி.ஐ., கட்சிக்கு சீட் வழங்கி உள்ளோம். அ.தி.மு.க., மத ரீதியான கட்சியல்ல. எங்களுக்கு அனைத்து மதங்களும் சமம். அ.தி.மு.க., ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது.வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளரை அறிவித்துள்ளோம். கட்சியில் ஜூனியர், சீனியர் கிடையாது. அனைத்து தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதுமுக வேட்பாளர்கள் இருப்பதில் என்ன தவறு உள்ளது. அ.தி.மு.க.,வை குறை சொல்வதற்காகவே, இரண்டு பத்திரிகைகள் உள்ளன. அவை, இரண்டு கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றன.கூட்டணி வராவிட்டால், கூட்டணி வரவில்லை என்கிறீர்கள்; கூட்டணி வந்தால், முக்கியமான கட்சிக்கு விட்டுக் கொடுத்ததாக கூறுகிறீர்கள்.கூட்டணி இருந்தால் தான் கட்சி வெற்றி பெற முடியும் என்றால், அக்கட்சி நிலையாக இருக்க முடியாது. வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் திருச்சியில் நடக்க உள்ளது.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக கூறுகின்றனர். அதெல்லாம் நடக்காது. கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது, பெட்ரோல் விலையை 5 ரூபாய் குறைப்பதாக கூறினர்; முழுமையாக குறைக்கவில்லை. டீசல் விலையை குறைக்கவில்லை.வெற்றி அறிவிப்புமாநில அரசு வரியை குறைத்தாலே, லிட்டருக்கு 10 ரூபாய் குறையும். அதைச் செய்யவில்லை. தேர்தலில் இவர்கள் வெற்றி பெறப் போவதில்லை. அவர்கள் வாக்குறுதிகள் அனைத்தும் வெற்று அறிவிப்புகள். அ.தி.மு.க., பலம் வாய்ந்த கட்சி. அதன் வலிமையை புரிந்து கொள்ள வேண்டும்.மக்களை ஏமாற்றி ஓட்டுகளை பெற்று, தங்கள் குடும்பம் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பது தான், தி.மு.க.,வின் நிலைப்பாடு. ஓட்டளித்த மக்களின் குறைகளை தீர்ப்பது தான் எங்கள் நிலைப்பாடு. மக்களுக்காகவே கூட்டணியிலிருந்து வெளியேறினோம். தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் 38 பேர், தமிழக மக்களுக்காக ஒன்றுமே செய்யவில்லை.கோதாவரி - காவிரி இணைப்பு உட்பட எதையும் நிறைவேற்றவில்லை. அவர்களுக்கு ஓட்டளித்தது வீண் என்பதை மக்கள் உணர்ந்து விட்டனர்.எனவே, அ.தி.மு.க., கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். கூட்டணியில் இருக்கும் போது ஓகோ என்றும், கூட்டணியிலிருந்து வெளியே வந்த பிறகு திட்டுவதும் இல்லை.மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது குரல் கொடுப்போம். தமிழக மக்களுக்கு அநீதி இழைப்பவர்கள் யாராக இருந்தாலும், எதிர்ப்பு தெரிவிப்போம். தமிழக மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டங்களை வரவேற்போம். இவ்வாறு பழனிசாமி கூறினார்.